ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க முடியாது -தமிழக முதல்வர் பழனிச்சாமி

குமரி மாவட்ட கொரோனோ தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். 268.58 கோடி செலவிலான அரசு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அவர் கூறியதாவது:

அரசு வழிக்காட்டுதலை சரியாக பின்பற்றியதால், குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவால், கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு விதித்த தடை விலக்கப்படுகிறது.இன்று முதல், விவேகானந்தர் பாறைக்கு படகுகள் இயக்கப்படும். விவேகானந்தர் பாறையை திருவள்ளுவர் சிலையுடன் இணைக்க, 35 கோடி ரூபாய் செலவில் தொங்குபாலம் அமைக்கப்படும்.

மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தது போல், ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க முடியாது. இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். மருத்துவக் கல்வி விஷயத்தில், உள்ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பள்ளி திறப்பு தொடர்பான கருத்து கேட்பு அறிக்கை வந்த பின், அதுபற்றிய முடிவு அறிவிக்கப்படும். சி.பி.ஐ., விசாரணை நடத்த, மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என கேரளா, மேற்குவங்க மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது, அந்த அரசுகளின் முடிவு. தமிழகத்தில் அப்படி ஒரு நிலை வந்தால், அது பற்றி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.