ராஜபக்சேவுக்கு ஆதரவு : தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றிய நிலையில், கடந்த 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென ரனில் விக்ரமசிங்கேயை நீக்கினார், சிறிசேனா. அத்துடன் நில்லாமல், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராகவும் நியமித்தார்.

மேலும் பிரதமர் இல்லத்தில் உடனடியாக வெளியேற விக்ரமசிங்கேவுக்கு உத்தரவிடப்பட்டதுடன், அவரது பாதுகாப்பும் அதிரடியாக குறைக்கப்பட்டது. இதனால் இலங்கை அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பிரதமர் பதவியில் தானே தொடர்வதாகவும், அதிபரின் முடிவு சட்டவிரோதமானது என்றும் அறிவித்த ரனில் விக்ரமசிங்கே, பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து விட்டார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அதிபரை அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி வரை அதிபர் சிறிசேனா முடக்கினார்.இலங்கையில் ரனில் விக்ரமசிங்கே பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் ராஜபக்சே வேண்டுகோளின்படியே இன்று அவரை சம்பந்தன் சந்தித்தார். சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக எதுவும் கலந்துரையாடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆதரவு கேட்ட ராஜபக்சேவுக்கு ஒரு சில நிபந்தனைகளை விதித்தார் ரா. சம்பந்தன். அதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே ஆதரவு அளிக்க முடியும் என்று ராஜபக்சேவுக்கு சம்பந்தன் நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறி உள்ளார்.

நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் இந்த தகவலை கூறி உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.பிரதமர் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

120 என்ற பெரும்பான்மை தன்னிடம் உள்ளதாகவும், சிக்கல் இல்லாத அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும் எனவும் வாக்குறுதியை அதிபர் வழங்கியிருந்தார். அதன் காரணமாகவே தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாக மகிந்த ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.