ரஸ்யா ஏற்பாடு செய்துள்ள ராணுவப் பயிற்சியில் 3 லட்சம் சிப்பாய்கள், 36 ஆயிரம் வாகனங்கள், 1000 விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள்

ரஸ்ய நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் ராணுவ பயிற்சியை (வாஸ்டாக்-2018) அந்த நாடு நடத்திவருகின்றது. கிழக்கு சைபீரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சியில் 3 லட்சம் இராணுவ சிப்பாய்கள், 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், 1000 விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன.

மேலும் ரஸ்யப் படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட இஸ்கந்தர் ஏவுகணைகள், டி-80 மற்றும் டி-90 பீரங்கிகள், எஸ்.யு.34, எஸ்.யு.35 போர் விமானங்கள் என ஏராளமான ராணுவ தளவாடங்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பயிற்சியில் சீன ராணுவத்தை சேர்ந்த 3,200 வீரர்கள் மற்றும் மங்கோலிய ராணுவ வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இது குறித்து ரஸ்ய நாட்டின் ராணுவ மந்திரி செர்ஜெய் ஸோயிகு கூறுகையில், ‘36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயிற்சியில் ஈடுபடுவதை கற்பனை செய்து பாருங்கள். இவை அனைத்தும் முடிந்தவரை ஒரு போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கும்’ என்று தெரிவித்தார்.

உக்ரைன் மற்றும் சிரியாவில் ரஸ்ய நாட்டின் மோதல்போக்கு, மேற்கத்திய நாடுகளின் நலன்களில் ரஸ்ய நாட்டின் தலையீடு போன்ற விவகாரங்களால் ரஸ்ய நாட்டிற்கும் , மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்த போர் பயிற்சி மேலும் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது. இந்த பயிற்சிக்கு நேட்டோ அமைப்பும் கண்டனம் தெரிவித்து உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது

Leave a Comment