ரஷ்யாவுடன் செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது.

500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.

புதியவகை சீரியங்கு ஏவுகணைகளை (குரூய்ஸ் மிசைல்) பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததன் மூலம் இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறுவதாக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே குற்றம்சாட்டிவந்தன. ஆனால், இதை ரஷ்யா மறுத்துவந்தது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
9M729 ஏவுகணைகள் பலவற்றை ரஷ்யா பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது தொடர்பாக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா சொல்லியது. இந்த வகை ஏவுகணைகளை நேட்டோ SSC-8 வகை ஏவுகணைகள் என்று புரிந்துவைத்திருந்தது. அப்போது அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை தமது கூட்டணி நாடுகளின் அமைப்பான நேட்டோவிடம் அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டை நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டன.

உலக நாடுகள் ஒவ்வொன்றிடமும் இருக்கும் என்று மதிப்பிடப்படும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை.
இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததற்கு ரஷ்யாவே முழு காரணம் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ ஒரு அறிக்கையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

முறைப்படி ஒப்பந்தம் ‘இறந்துவிட்டதாக’ ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.

ரஷ்யாவின் சர்ச்சைக்குரிய 9M729 ஏவுகணையால் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு உண்டாகும் இடர்களுக்கு பொறுப்பான, அளவான முறையில் பதிலடி தரப்படும் என்று நேடோ அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குறிப்பிட்டார்.