ரணில் தான் பிரதமர் என்கிறார் சபாநாயகர் இலங்கையில் தொடரும் பொம்மலாட்டம்

இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளரான, மைத்ரிபால சிறிசேனவுக்கு, 67, ரணில் விக்கிரம சிங்கேவின், 69, யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற, சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர்.

இந்தாண்டு, இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மகிந்த ராஜபக்சே தலைமையிலான, இலங்கை சுதந்திர முன்னணி, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், அடுத்த பொதுத் தேர்தலில், ராஜபக்சேவின் கை ஓங்கும் நிலை உருவானது. இதை அடுத்து, விக்கிரமசிங்கே விடம் இருந்து, சிறிசேன, விலகத் துவங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்குவதாகவும், அதிபர் சிறிசேன, சமீபத்தில் அறிவித்தார்.மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் கூட்டணி அமைத்ததோடு, அவரை, பிரதமராகவும் நியமித்தார்.

பட்ஜெட் தொடருக்காக, நவ., 5ல், பார்லி கூட இருந்த நிலையில், அதை, நவ., 16க்கு, ஒத்தி வைத்தார்.இதற்கிடையே, பிரதமர் பதவியில் தொடருவதாக கூறிய, ரணில் விக்கிரமசிங்கே, ‘பலத்தை நிரூபிக்க பார்லி.,யை உடனடியாக கூட்ட வேண்டும்’ என, பார்லிமென்ட் சபாநாயகர், கரு ஜெயசூர்யாவுக்கு, கடிதம் எழுதினார்.

இந்நிலையில், இலங்கை பிரதமராக, ரணில் விக்கிரமசிங்கேவை அங்கீகரிப்பதாக, சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.இது

தொடர்பாக, அதிபர் சிறிசேனவுக்கு, ஜெயசூர்யா எழுதிய கடிதம்:நாட்டின் ஜனநாயகத்தை காக்கவும், சிறந்த நிர்வாகத்தை அளிக்கவும், ரணில் விக்கிரம சிங்கேவுக்கு மக்கள் ஓட்டளித்துஉள்ளனர். அவரை, நாட்டின் பிரதமராக, அங்கீகரிக்கிறேன்.

பிரதமர் பதவியில் உள்ள விக்கிரமசிங்கேவின் அதிகாரங்களை, மீண்டும் அளிக்க வேண்டும். பார்லிமென்ட்டை, நவ., 16 வரை, ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளது கேள்விக்குரியது. இதனால், மோச மான, விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படும். பார்லி மென்டை, ‘சஸ்பெண்ட்’ செய்யும் நடவடிக்கையை, சபாநாயகருடன் கலந்தாலோசித்தே எடுக்க வேண்டும். விக்கிரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை வாபஸ் பெற்றது ஏன் என்பதை, சிறிசேன விளக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், 225 உறுப்பினர்கள் உடைய இலங்கை பார்லி.,யில், ரணிலின், யு.என்.பி.,க்கு, 106 உறுப்பினர்கள் உள்ளனர். யு.பி.எப்.ஏ.,க்கு, 95 உறுப்பினர்கள் உள்ளனர்.தமிழர் கட்சியான, டி.என்.ஏ.,எனப்படும், தமிழ் தேசிய கூட்டணிக்கு, 16 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் ஜே.வி.பி., கட்சிக்கு, ஆறு உறுப்பினர்களும் உள்ளனர்.இவர்கள், யாருக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கின்றனர். இவர்களில், டி.என்.ஏ., வின் ஆதரவை பெற, ராஜபக்சே முயன்று வருவதாக தெரிகிறது.

இதற்கிடையே, ராஜபக்சேவின் பலத்தை அதிகரிக்கும் வகையில், அவருக்கு ஆதரவு அளிப்பதாக, யு.என்.பி.,யை சேர்ந்த, தமிழ் எம்.பி.,யான, வடிவேல் சுரேஷ் நேற்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரணில் விக்கிரமசிங்கே மறுப்பு

இலங்கையில், அதிபர் மைத்ரிபால சிறிசேனவால், பிரதமர் பதவியில் இருந்து, நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, அரசு இல்லத்தை காலி செய்ய மறுத்து உள்ளார்.அவர் தலைமையிலான, யு.என்.பி.,யை சேர்ந்த, ஆயிரக்கணக்கான

ஆதரவாளர்கள், அவரது இல்லம் அருகே அரணாக நின்று வருகின்றனர்.இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.

இதையடுத்து, விக்கிரமசிங்கேவை, அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்ற, நீதிமன்ற உத்தரவை பெற, போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், கண்டி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற புத்தர் கோவிலுக்கு, ராஜபக்சே சென்றுள்ளார். புதிய அமைச்சரவை அமைக்கும் முன், புத்த துறவிகளிடம் ஆசி பெற அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

இலங்கை பெட்ரோலிய அமைச்சராக பதவி வகிப்பவர், அர்ஜுனா ரணதுங்க. இவர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். ரணில் விக்கிரமசிங்கேவின் ஆதர வாளர். இவர், கொழும்பில் உள்ள, ‘சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ அலுவலகத் துக்கு, தன் பாதுகாவலர்களுடன் நேற்று சென்றார்.

அப்போது, அங்கு கூடியிருந்த, ராஜபக்சே ஆதரவாளர்கள், ‘பார்லி, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு விட்டது; உங்களுக்கு இங்கு வேலையில்லை’ என, கோஷமிட்டு, ரணதுங்கவை உள்ளே விட மறுத்ததால், தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, ரணதுங்கவின் பாதுகாவலர்கள், துப்பாக்கியால் சுட்டனர். இதில், ராஜபக்சே ஆதரவாளர் ஒருவர் பலியானார்; மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். ரணதுங்கவின் பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறிசேன, ‘பகீர்’ குற்றச்சாட்டு

இலங்கை அதிபர், மைத்ரிபால சிறிசேன நேற்று கூறியதாவது:தன்னை சுற்றியுள்ள நபர்களின் நலனுக்காக, இலங்கையின் எதிர்காலத்தை சூறையாட நினைத்தார், ரணில் விக்கிரமசிங்கே. சாதாரண மக்கள் பற்றிய எண்ணம் அவருக்கு இல்லை.சிறந்த நிர்வாகத்தின் அடிப்படையை, முற்றிலும் நாசமாக்கியவர், விக்கிரமசிங்கே.

எங்கும், எதிலும் ஊழல் மலிந்து காணப்பட்டது. கூட்டு பொறுப்புணர்வை கேலிப்பொருள் ஆக்கும் வகையில், மனம் போன போக்கில், அவர் முடிவுகளை எடுத்தார்.எங்கள் இருவர் இடையே, கொள்கை தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தில், பெரியளவில் இடைவெளி விழுந்தது. அதனால், அரசியல், பொருளாதார பிரச்னைகள் உருவாகின. 2015 பிப்ரவரி, 2016 மார்ச்சில் ரிசர்வ் வங்கி பத்திரங்கள் வெளியீட்டில் முறைகேடுகள் நிகழ்ந்ததால், இலங்கை பொருளாதாரம் சரிவை சந்தித்தது.

என்னை கொல்ல நடந்த சதி திட்டம் தொடர்பாக, முறையான விசாரணை நடத்தப்பட வில்லை. இந்த விசாரணையை நடத்திய மூத்த போலீஸ் அதிகாரிகள், அட்டர்னி ஜெனரல் துறை அதிகாரிகளை வேண்டுமென்றே சந்திக்கவில்லை என, தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் நிகழ்ந்து வரும் பல்வேறு குழப்பங்கள் குறித்த, நீண்ட யோசனைக்கு பின், ராஜபக்சேவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். சட்ட வல்லுனர்களின் ஆலோசனைப்படி, அரசியல் சாசன அடிப்படையில், ராஜபக்சே, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.