ரஜினியை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

” ரஜினியை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது” என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது : சேலத்தில் நடந்த பேரணியில் என்ன நடந்ததோ அதனை தான் ரஜினி கூறியுள்ளார். தி.க.,வினர் ரஜினியை மிரட்டி பார்க்கிறார்கள். கொடும்பாவியை எரிப்போம். வீட்டை முற்றுகையிடுவோம் என்பது மிரட்டல்தானே. பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவுபடுத்தும் செயலை தி.க.,வினர் செய்து வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி பிழைப்பு நடத்துகின்றனர். ஆன்மிகவாதிகளை பழிதீர்க்கும் செயலை தி.க.,வினர் செய்கின்றனர். ரஜினி நியாயவாதி. நல்ல மனிதர். மனதில் பட்டதை கள்ளம் கபடம் இல்லாமல் பேசுபவர் ரஜினி.

சேலம் பேரணியில், ராமர் படத்தை நிர்வாணமாக கொண்டு வந்தது உண்மையா இல்லையா? இதே வேறு மதத்தை சேர்ந்த கடவுளை இப்படி செய்திருந்தால் சும்மா விடுவார்களா? பயங்கரவாதம் வெடித்திருக்காதா? ஹிந்து மதத்தை இழிவுபடுத்துபவர்கள் தேர்தலில் அதன் விளைவுகளை அனுபவிப்பார்கள்.

ரஜினி பேசியதை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். அதனால், ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை, தமிழச்சியை திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 1971 ல் சேலத்தில் ஈ.வே.ரா., நடத்திய பேரணி குறித்து துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பேசியது சர்ச்சையானது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். ஆனால், பத்திரிகைகளில் வெளியானதை தான் பேசினேன். இதனால் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி கூறினார்.
இது குறித்து , அதிமுக அரசில் அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 1971ல் நடைபெறாத விஷயத்தை பேசி, மக்களை ரஜினி திசை திருப்பி மலிவான அரசியல் செய்யக் கூடாது. எந்த ஆதாயத்திற்காக நடக்காத ஒன்றை பேச வேண்டும்? தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு முன்பாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்றார்.

அதேநேரத்தில், அதிமுக அரசில் அங்கம் வகிக்கும் மற்றொரு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ரஜினியை விமர்சிப்பவர்களை கண்டித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.