ரஜினிகாந்துக்கு எதிராக திடீர் போராட்டம் உருவபொம்மை எரிப்பு

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அரசியல் கருத்துகளை வெளியிட்டு அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘என் வாழ்க்கை கடவுள் கையில்’ இருக்கிறது என்றும், ‘நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்’ என்றும் அவர் பேசியது அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

‘நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அதிரடி அறைகூவலும் விடுத்து இருக்கிறார். இதனால் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரஜினியின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் அரசியலுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்றும் விவாதங்கள் கிளம்பின.

இந்நிலையில் சென்னை கதீட்ரல் சாலையில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமியின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டு, அவரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.

அப்போது ரஜினியின் உருவபொம்மை திடீரென்று வெடித்து சிதறியது. ரஜினி வீட்டை முற்றுகை யிட வந்த போராட்டக்காரர் கள் உருவப் பொம்மைக்குள் சிறிய ரக பட்டாசுகள் மற்றும் சிறிய நாட்டு வெடி குண்டுகளை பதுக்கி வைத் திருந்தனர்.அதனால் அது வெடித்து சிதறியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து வீர லட்சுமி உள்ளிட்ட 30 பேரை போலீசார்அதிரடியாக கைது செய்தனர்.

முக்கிய சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரஜினிகாந்த்தின் வீட்டை நோக்கி செல்ல முயன்றதால், அவரது இல்லத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.