ம.பி.காங்., அரசு மீது மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக ம.பி., பாஜ., மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா

ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் 22 எம்.எல்.ஏ.க்கள், கட்சியிலிருந்து விலகியதால் ம.பி.காங்., அரசு மீது மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக ம.பி., பாஜ., மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார்.

ஒரு வருடம் மற்றும் மூன்று மாதங்களை நிறைவு செய்யவுள்ள கமல்நாத் தலைமையிலான காங்., அரசு, ஆட்சியைக் காப்பாற்ற கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கட்சியிலிருந்து சிந்தியா விலகிய பிறகு அவரும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா கடிதங்களை ஆளுநர், சட்டசபை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். இதனால், கமல்நாத் அரசு ஆட்டம் கண்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் சட்டசபையில் காங்., பலம் 92ஆக குறைந்துவிடும். பெரும்பான்மையை நிரூபிக்க 104 இடங்கள் தேவையுள்ள நிலையில், பாஜ.,விடம் தற்போது 107 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், காங்., ஆட்சி கவிழும் சூழலில், பாஜ., ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.,க்களும் நாளைக்குள்(வெள்ளிக்கிழமை) தன் முன்னர் நேரில் ஆஜராக வேண்டும் என சபாநாயகர் நர்மதா பிரசாத் பிரஜாபதி அறிவித்துள்ளார்.