ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கி மூக்கறுப்பு செய்துள்ளது தி.மு.க. தலைமை

தி.மு.க. கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கி மூக்கறுப்பு செய்துள்ளது தி.மு.க. தலைமை.

கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறினார் வைகோ. அவரைத் தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியேறின. பின் இந்த நான்கு கட்சிகளும் தி.மு.க.வின் தோழமை கட்சிகளாகவே செயல்பட துவங்கின.அதனால் லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இக்கட்சிகள் இடம் பெறும் என முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இக்கட்சிகள் வேறு எந்த சிந்தனையும் இன்றி தி.மு.க.வுடன் பேச்சை தொடர்ந்தன.

அதில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கியது. அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இரு தொகுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் ம.தி.மு.க.வுக்கு மட்டும் ஒரே ஒரு லோக்சபா தொகுதியை ஒதுக்கி தி.மு.க. தலைமை மூக்கறுப்பு செய்துள்ளது. அதை சரிக்கட்டும் விதமாக தேர்தலுக்கு பின் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

இவ்வளவு நாட்களாக கூடவே இருந்த கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஆளுக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்த தி.மு.க. தலைமை வைகோ விஷயத்தில் மட்டும் இப்படி நடந்து கொண்டதை ம.தி.மு.க. நிர்வாகிகள் ஏற்கவில்லை. முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. – ஐ.ஜே.கே. வரிசையில் ம.தி.மு.க.வையும் சேர்த்து விட்டதாக அவர்கள் குமுறுகின்றனர்.

கூட்டணி பேச்சு துவங்கியதில் இருந்து நான்கு லோக்சபா தொகுதிகள்; ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்டு ம.தி.மு.க. மல்லுக்கட்டியது. திருச்சி, காஞ்சிபுரம், ஈரோடு, தேனி என நான்கு தொகுதிகள் அடங்கிய பட்டியலை துரைமுருகன் தலைமையிலான தி.மு.க. குழுவிடம் கொடுத்திருந்த ம.தி.மு.க.வினர் அவற்றை ஒதுக்கும்படி இரண்டு முறை பேச்சு நடத்தினர்.

ஆனால் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட ஒரு தொகுதி மட்டுமே தரப்படும்; வேண்டுமானால் ராஜ்யசபா தேர்தல் வரும்போது ஒரு பதவி தரப்படலாம் என்பதில் தி.மு.க. பிடிவாதமாக இருந்தது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த வைகோ நேற்று முன்தினம் அறிவாலயம் வரை போய் விட்டு கையெழுத்து போட மறுத்து விட்டு வந்தார். அதன் பிறகாவது இரண்டு லோக்சபா தொகுதிகள் என்ற அளவுக்காவது தி.மு.க. இறங்கி வரும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் தி.மு.க. தன் முடிவை தளர்த்த மறுத்து விட்டது.

இதற்கிடையில் ‘இன்றைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும். நாளை விருதுநகர் மாநாட்டுக்கு எல்லாரும் போய் விடுவோம்; அதற்குள் வந்தால் கூட்டணியில் இடம்; இல்லையேல் உங்கள் முடிவு’ என தி.மு.க. தரப்பில் நேற்று காலையில் கூறப்பட்டதாக தெரிகிறது.
அப்போதும், ‘எனக்கு இது தான் கடைசி தேர்தல். கட்சிக்கு அங்கீகாரமும் இல்லை. தேர்தல் கமிஷனில் பம்பரம் சின்னம் கிடைக்குமா

என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே கட்சி அங்கீகாரம் பெறுவதற்காக நான்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும். நான் நாற்பது தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று வைகோ கூறியிருக்கிறார். அதற்கும் தி.மு.க. மசிய மறுத்ததை அடுத்து சென்னையில் நேற்று ம.தி.மு.க. உயர்நிலை குழுக் கூட்டம் கூடியது.

அதில் அவைத் தலைவர் துரைசாமி பேசுகையில், ‘லோக்சபா தேர்தலில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரத்தை உங்களிடம் தந்து விட்டோம். எனவே நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’ என கூறியுள்ளார். கூட்டத்தில் பங்கேற்ற மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் சிலர், ‘ஒரு லோக்சபா தொகுதிக்கு சம்மதிக்க கூடாது’ என வலியுறுத்த காத்திருந்தனர்; அவர்களை பேச அனுமதிக்கவில்லை. அதன்பின் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி தருவதாக ஒப்புதல் அளித்தால் ஒரு தொகுதி உடன்பாட்டுக்கு கையெழுத்திடுவதாக தி.மு.க. தலைமைக்கு வைகோ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்து அழைப்பு வந்ததும் ஒரு தொகுதி பெற அறிவாலயத்திற்கு புறப்பட்டு சென்றார் வைகோ.