மோடி பதவியேற்பு விழாவில், ‘பிம்ஸ்டெக்’ தலைவர்கள் பங்கேற்பார்கள்

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில், ‘பிம்ஸ்டெக்’ தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.  கடந்த 2014ம் ஆண்டில் வெற்றி பெற்று பிரதமராக மோடி பதவியேற்ற போது, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. 2வது முறையாக , வரும் 30ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி ‘பிம்ஸ்டெக்’ (வங்காள விரிகுடா நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு) அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுப்பது குறித்து எந்த அறிகுறியும் தெரியவில்லை எனவும் தெரிவித்தன.

புல்வாமா தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுடனான இந்திய உறவு மோசமடைந்தது. புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின், பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்டநாடுகள், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் பரஸ்பரம் ஒத்துழைப்பை ஏற்படுத்தி கொள்ள , பிம்ஸ்டெக் எனும், வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு அமைப்பு உருவாக்கப்பட்டது.