மோடி – டிரம்ப் சந்திப்பு குறித்து பாக். பிரதமர் இம்ரான் தனது நாட்டு மக்களிடம் புலம்பல்

அணு ஆயுதம் கொண்ட இரு நாடுகளிடையே போர் வெடித்தால் அது மொத்த உலக நாடுகளையுமே பாதிக்கும் என காஷ்மீர் விவகாரத்தில் மோடி – டிரம்ப் சந்திப்பு குறித்து பாக். பிரதமர் இம்ரான் தனது நாட்டு மக்களிடம் புலம்பி தீர்த்துள்ளார்.

பிரான்சில் நடைபெற்ற ஜி -7 மாநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்து பேசினர். அப்போது காஷ்மீர் பிரச்னை இரு தரப்பு விவகாரம் என டிரம்ப் அதிரடியாக தெரிவித்து ஒதுங்கிவிட்டார்.

இந்நிலையில் பாக். பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு டி.வி. வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியும். பாகிஸ்தானுக்கு தேவை பேச்சுவார்த்தை. ஆனால் பயங்கரவாத பிரச்சினையை இந்தியா தொடர்ந்து எழுப்புகிறது.காஷ்மீரை பொறுத்தவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அமைதியும் வளர்ச்சியும் தேவை .காஷ்மீர் மக்களுக்கு உதவ நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்.

இந்திய அரசின் பிடிவாதம் போரை நோக்கி இட்டுச் செல்ல கூடும். இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. போர் சூழ்நிலை ஏற்பட்டால் மொத்த உலகமே பாதிக்கும்.காஷ்மீர் பிரச்சினை குறித்து, முஸ்லிம் நாடுகளுடன் பேச உள்ளேன். இதனை வரும் செப்டம்பரில் நடக்க உள்ள ஐ.நா. பொதுச்சபையிலும் முறையிடுவேன். இவ்வாறு இம்ரான் பேசினார்.