மோடி அரசை மத்தியில் இருந்து அகற்றியாக வேண்டும்

தி.மு.க., தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதும், பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது, மோடி அரசை மத்தியில் இருந்து அகற்றியாக வேண்டும். அது வரை முழு வீச்சில் போராட வேண்டும் என்றார்.இதற்குக் காரணம், மறைந்த கருணாநிதிக்கு சென்னையில் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு வருமாறு பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவை அழைத்து வர வேண்டும் என, தி.மு.க., தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மூலம், ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர் டில்லி சென்று, அமித் ஷாவிடமே பேசினார். கூட்டத்தில் கலந்து கொள்வதாக, அமித்ஷா ஒப்புக் கொண்டார். பின், முடிவை மாற்றிக் கொண்டார்.இதனால், பா.ஜ., மீது தி.மு.க., அதிருப்தி அடைந்தது. அமித்ஷா வராததற்கு, பிரதமர் மோடிதான் காரணம் என, தி.மு.க.,வுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்தே, மத்திய பா.ஜ., அரசையும், மோடியையும் பொதுக் குழுவில் கடுமையாக விமர்சித்து ஸ்டாலின் பேசியிருக்கிறார். தொடர்ந்து இதே போல கடுமையான விமர்சனத்தையே பொதுக் கூட்டங்களிலும் ஸ்டாலின் பேச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.