மோடி அரசை அகற்ற நக்சல் சதி: போலீசார் தகவல்

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய கும்பலுடன் தொடர்புடையதாக, நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த, எழுத்தாளர் வரவர ராவ், ஐதராபாதில், கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதி களில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில், நக்சலைட் ஆதரவாளர்களான, வெர்னான் கன்சால்வெஸ், அருண் பெரைரா, தொழிற்சங்க தலைவர் சுதா பரத்வாஜ் மற்றும் கவுதம் நவாலகா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ‘இந்த ஐந்து பேரையும் செப்., 6 வரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும்’ என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக புனே போலீசார் கூறுகையில், நக்சல்களுடன் அவர்களுக்கு தொடர்புஉள்ளது என்பது தெளிவாக தெரிந்த பின்னரே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மாவோயிஸ்ட்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பை ஆதாரங்கள் தெளிவாக காட்டியது.

சத்தீஸ்கரில் நக்சலைட்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என நக்சலைட்கள் திட்டமிட்டனர். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என நினைத்தனர்.அவர்களின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கைதானவர்கள் பெரிதும் உதவி செய்தனர். இதில் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கும் தொடர்பு உள்ளது.
ராஜிவ் கொலை போல், பிரதமரை கொல்ல வேண்டும் என கடிதம் ஒன்றில் நக்சலைட்கள் கூறியுள்ளனர். கைதானவர்கள் வீட்டில் நடந்த சோதனையில், மத்திய அரசை அகற்ற மாவோயிஸ்ட்கள் செய்த சதி குறித்த ஆதாரங்கள் கிடைத்தன. இவ்வாறு அவர்கள் கூறினர்.