மோசடி சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான சர்ச்சை ஓய்வதற்குள், புதிதாக மோசடி சர்ச்சையில் சிக்கி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி.

தோனியும் அவரது மனைவி சாக்ஷியும், தங்களின் நிறுவனங்களில் போலி ஒப்பந்தங்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.தோனி மனைவி சாக்ஷி நடத்தும் அம்ராபாலி மகி (மகி என்பது தோனிக்கு ரசிகர்கள் வைத்த செல்லப் பெயர்) நிறுவனம் போலி ஒப்பந்தங்கள் தயாரித்து, வீடு கட்டி தருவதாக மக்கள் பணத்தை ஏமாற்றியதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஒப்பந்தங்களின் உண்மைதன்மை குறித்து ஆய்வு செய்ய 2 ஆடிட்டர்களைக் கொண்ட சிறப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இவர்கள் கோர்ட்டில் அளித்துள்ள அறிக்கையில், ரிதி ஸ்போட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் அமராபாலி மகி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் போலி ஒப்பந்தங்கள் தயாரித்தது தெரிய வந்துள்ளது.

ரிதி நிறுவனத்தில் முக்கிய பங்குதாரராக உள்ளார் தோனி. அம்ராபாலி மகி கட்டுமான நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் தோனியின் மனைவி சாக்ஷி. அம்ராபாலி நிறுவனத்தின் தூதராக இருந்து வந்த தோனி, 2016 ல் வீடு கட்ட பணம் கொடுத்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் நெருக்கடி கொடுத்ததால் தூதர் பதவியில் இருந்து விலகினார்.

அறிக்கையில், வீடு வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் அளித்த பணம் முழுவதும் சட்ட விரோதமாக ரிதி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் படி சட்டத்திற்குட்பட்டு எதுவும் நடக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில், அலுவல உதவியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் போலி நிறுவனங்கள், வருமானம் இல்லாத நபர்கள் பெயர்களில் பணம் பரிவர்த்தனை செய்து மோசடி செய்ததாக 23 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் அம்ரம்பலி மகி மற்றும் அம்ரம்பலி மீடியா விஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் சாக்ஷி அளித்த வாக்குமூலத்தில், பங்குதாரர்களிடம் இருந்து ரொக்கமாகவே பணத்தை பெற்று, அனைத்து செலவுகளுக்கும் ரொக்கமாகவே பணம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆடிட்டர்கள் அளித்துள்ள அறிக்கையில், ராஞ்சியில் இந்நிறுவனம் துவங்கி உள்ள கட்டுமானங்களுக்காக இரு நிறுவனங்களுக்கும் இடையே போடப்பட்ட கூறப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான எந்த நகலும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அம்ராபலி மீடியா விஷன் பிரைவேட் லிமிடெட், தனக்கு வந்த நிதியை சினிமா தயாரிப்பதற்கு பயன்படுத்தி உள்ளது. ரிதி நிறுவனம் ரூ.24 கோடியை விளம்பரம் உள்ளிட்ட செலவுகளுக்கு பயன்படுத்தி உள்ளது. 2009-2015 வரை அம்ராபலி நிறுவனத்திடம் இருந்து ரிதி நிறுவனம் ரூ.42.22 கோடிகளை பெற்றுள்ளது. எதற்காக இந்த பணம் பெறப்பட்டது என தெரியவில்லை. இரு நிறுவனங்களிடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள், தீர்மானங்கள் என எதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. அனைத்தும் வெறும் வெள்ளை காகிதமாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளின் போது சென்னை அணியுடன் இந்நிறுவனங்கள் போட்ட ஒப்பந்தத்திற்கும் எந்த ஆதாரமும் இல்லை எனவும் ஆடிட்டர்கள் தெரிவித்துள்ளனர்.ஆடிட்டர்களின் இந்த அறிக்கையை தொடர்ந்து, முடிக்கப்படாமல் இருக்கும் அம்ராபலி குழுமத்தின் வீடு கட்டும் பணிகள் அனைத்தையும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த என்பிசிசி நிறுவனத்திடம் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.