மொத்தமுள்ள 2,236 பேரில் 2,130 பேர் பங்கேற்று தீர்மானங்களுக்கு ஆதரவு: சசிகலா பதவியை ரத்து செய்தது அதிமுக பொதுக்குழு – முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிக அதிகாரங்கள்

அதிமுகவில் சசிகலா வகித்து வந்த தற்காலிக பொதுச்செயலாளர் பதவியையும், அவர் அறிவித்த நியமனங்களையும் ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தமுள்ள 2,236 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,130 பேர் பங்கேற்று தீர்மானத்தை ஆதரித்தனர்.

கட்சியில் பொதுச்செயலாளர் பதவியே ரத்து செய்யப்பட்டு, அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளன.

12 தீர்மானங்கள்

அதிமுக இரு அணிகள் இணைந்த பிறகு அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெருமையும், கம்பீரமும் மறைந்த ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது என உளப்பூர்வமாக நம்புகிறோம். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. எனவே, அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவி ரத்து செய்யப்படுகிறது. அதற்கேற்ப அதிமுக கட்சி விதி 43-ல் திருத்தம் செய்யப்படுகிறது. ஜெயலலிதா விரும்பியவாறு அதிமுகவை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் உருவாக்கப்படுகின்றன. பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்தல் மூலம் இப்பொறுப்புகள் நிரப்பப்பட வேண்டும்.

அதிகாரங்கள் மாற்றம்

அமைப்புத் தேர்தல் நடைபெறும்வரை ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் செயல்படுவர். பொதுச்செயலாளரின் அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து வரவு செலவுகள், படிவம் ஏ, படிவம் பி உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள், கட்சி தொடர்பான அனைத்து அறிவிப்புகள், நியமனங்கள், ஒழுங்கு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு இப்பதவிகளில் அவர்கள் நீடிப்பர்.

சசிகலா நியமனம் ரத்து

ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கட்சிக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் நோக்கத்தோடும் டிடிவி தினகரன் அறிவிக்கும் நியமனங்கள் எதுவும் செல்லாது. ஜெயலலிதாவின் அகால மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியும், கவலையும் நிறைந்த சூழலில் கடந்த 2016 டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் ரத்து செய்யப்படுகிறது. 30-12-2016 முதல் 15-2-2017 வரை சசிகலா மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரிந்த இரு அணிகளும் மீண்டும் இணைந்து பணியாற்ற முடிவு செய்ததை பொதுக்குழு ஒருமனதாக அங்கீகரிக்கிறது. அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டு கட்சியை வெற்றிப் பாதையில் நடத்திச் செல்ல பொதுக்குழு உறுதியேற்கிறது. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் அவரவர் பொறுப்புகளில் கட்சி விதிகளின்படி தொடர்ந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சி விதிகளில் திருத்தம்

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மாவட்டந்தோறும் சிறப்பாகக் கொண்டாடி வரும் அரசுக்கு நன்றி, ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ள முதல்வருக்கு பாராட்டு, கட்சியையும், அரசையும் கட்டுக்கோப்பாக காப்பாற்றி வழி நடத்திச் செல்லும் நிர்வாகிகளுக்கு பாராட்டு என 12 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப அதிமுக சட்டதிட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு அதற்கு பொதுக்குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 2,236 பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் 2,130 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை முழுமனதாக ஆதரித்து அங்கீகாரம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.