மெரீனாவில் மீண்டும் புரட்சி வெடிக்கும்: நடிகர் ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுக்கான மெரீனா போராட்டம் என்னால் வெற்றி பெற்றதாகச் சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. உங்களுடன் நான் இருந்ததால்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்றது. நான் இத்துடன் நின்றுவிடவில்லை.

விவசாயிகளுக்கான போராட்டத்தை 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டேன். தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் நலனுக்காக நான் ஒரு திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

“விவசாயிகள் உயிர் காப்போம். சொல்லாதே செய்’ என்ற பெயரில் அந்தத் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளேன். இதற்கான இணையதளமும் தொடங்கப்படும். மாணவ, மாணவிகளாகிய நீங்கள் விவசாயிகளுக்காக உதவி செய்யுங்கள். உங்களால் முடிந்த தொகையை அந்தத் திட்டத்துக்குக் கொடுங்கள்.

ஒரு மாணவர் ஒரு ரூபாய் கொடுத்தால்கூட போதும். கண்ணீரில் தத்தளிக்கும் எத்தனையோ ஏழை விவசாயிகளை நம்மால் காப்பாற்ற முடியும். தமிழக விவசாயிகளின் அனைத்து கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். தள்ளுபடி செய்யத் தவறினால், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல, மெரீனாவில் மீண்டும் புரட்சி வெடிக்கும். போராட்டம் நடப்பதற்கு முன்னால் நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும் என்றார்.