முழு அடைப்புக்கு ஒட்டு மொத்த தமிழினமும் ஆதரவு தர வேண்டும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

செத்து மடிந்து கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்ற 25–ந்தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒட்டு மொத்த தமிழினமும் ஆதரவு தர வேண்டும் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பொதுக்கூட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 25–ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு கட்டமாக அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கும் வகையில், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மயிலாப்பூரில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

குடிநீர் பிரச்சினை

இன்றைக்கு விவசாயிகள் மண்டல வாரியாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் காவிரி டெல்டா பாதிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே பாம்பாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சியால் கொங்கு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் வடக்கு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் என்பது ஒரு புறமிருக்க, தமிழகத்தின் நதி நீர் உரிமைகளை பேச்சுவார்த்தை மூலம் பெற முடியாத அ.தி.மு.க. அரசால் இன்றைக்கு தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் தவிக்கிறது.

பன்னீர்செல்வம் என்ன செய்தார்?

இப்படியொரு சூழ்நிலையில் இங்கே இருக்கின்ற அரசு, குறிப்பாக அ.தி.மு.க. அரசு என்ன செய்தது? ஒன்றும் செய்யவில்லை. ஓரமாக ஒதுங்கி விவசாயிகள் படும் இன்னல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரியில் ஜூன் மாதத்தில் ஒரு வருடம் கூட மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரியில் இருந்து இறுதி தீர்ப்பின் படியான தண்ணீரை பெற முடியவில்லை. விவசாயக்கடன் தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகளின் பிள்ளைகள் பெற்ற கல்விக்கடனைக் கூட தள்ளுபடி செய்யவில்லை.

நாமெல்லாம் சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தை கூட்டுங்கள் என்றோம். வறட்சி மாநிலமாக அறிவிக்க சட்டமன்றத்தை கூட்டுங்கள் என்றோம். அனைத்துக் கட்சிகளும் கடுமையாக போராடிய பிறகு ஒருநாள் தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய பயிர் இழப்பீட்டு நிவாரணத்தையும் வழங்கவில்லை.

ஓ.பி.எஸ் போய் இ.பி.எஸ். வந்தார். அவர் 21.2.2017 அன்று ஓ.பி.எஸ் அறிவித்த நிவாரணங்களை விவசாயிகளுக்கு அளிப்பதாக அறிவித்தார். அந்த அறிவிப்பும் அனைத்து விவசாயிகளுக்கும் இல்லை. ஆனால் அவரும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியைக் கூட வழங்கவில்லை. மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

பதவியை தக்க வைத்துக்கொள்ள…

பதவியை தக்க வைத்துக் கொள்ள, பா.ஜ.க.விற்கு ஜால்ரா அடிக்க மட்டுமே அவர்கள் தயாராக இருக்கிறார்கள். தமிழக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியவர்கள் இன்றைக்கு டெல்லியில் பா.ஜ.க. அரசிடம் இவர்களின் ஊழல்களில் இருந்தும், வருமான வரித்துறை ரெய்டுகளில் இருந்தும் தப்பிக்க மண்டி போட்டு படுத்திருக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது.

ஓ.பி.எஸ். தலைமையில் இருந்த அ.தி.மு.க. அரசும், இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள எடப்பாடி அரசும் மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசிடம் பறிகொடுத்து விட்டது. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் பறிகொடுத்து விட்டது.

முழு அடைப்பு ஏன்?

விவசாயிகளின் பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். விவசாயிகளின் தற்கொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்த, தி.மு.க. உணர்வை மட்டுமல்ல, இங்கே இருக்கின்ற அனைத்துக் கட்சிகளின் உணர்வுகளை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க இந்த முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துகிறது.

ஆதரவு தாருங்கள்

நான் ஏற்கனவே அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், வணிகர் சங்கங்களுக்கும், நடிகர் சங்கங்களுக்கும், அனைத்து முக்கிய சங்கங்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். ஆனாலும் இந்த மேடையில் நின்று ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உருக்கமான அழைப்பினை பகிரங்கமாக விடுக்கிறேன். செத்துமடிந்து கொண்டிருக்கும் உழவர்களை காப்பாற்ற, செத்து மடிந்து கொண்டிருக்கின்ற விவசாயத்தை பாதுகாக்க, அனைவரும் ஆதரவு தாரீர். ஜனநாயக முறையில் நடக்கும் இந்த முழு அடைப்பிற்கு ஆதரவு தர வேண்டும். தமிழக விவசாயிகளுக்காக தமிழக மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவற்கான வாய்ப்பு தான் 25–ந்தேதி நடைபெறப்போகும் முழு அடைப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.