ஜெயலலிதாவின் சொந்த மகன் தான்தான் என்று கூறி போலீயான ஆவணங்களை வைத்து ஏமாற்றிய நபரை கைது

சென்னை: ஜெயலலிதாவின் சொந்த மகன் தான்தான் என்று கூறி போலீயான ஆவணங்களை வைத்து ஏமாற்றிய நபரை கைது செய்து விசாரித்து ஏப்ரல் 10ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி பலரும் குற்றம் சாட்டி வருகின்றன. ஜெயலலிதா மரணத்தில் குழப்பம் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகன் என்றும் தன்னை தத்து கொடுத்து விட்டதாகவும் பத்திரங்களுடன் வந்து புகார் அளித்தார். இதற்கு அப்போதே நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இப்போது கிருஷ்ணமூர்த்தி போலியான நபர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலி என்று தெரியவந்துள்ளது.

ஜெயலலிதாவின் மகன்

ஈரோடு மாவட்டம், காஞ்சி கோவில் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,32. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகன் ஆவேன். நான் 1985ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம்தேதி பிறந்தேன்

தத்து கொடுத்தனர்

நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1986ஆம் ஆண்டு காஞ்சி கோவில் கிராமத்தை சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் என்னை தத்துக் கொடுத்து விட்டனர். இதற்கான ஒப்பந்தத்தில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டுள்ளனர்.

ஜெயலிதாவை சந்திப்பேன்

ஈரோட்டில் தத்து எடுத்த பெற்றோருடன் வசித்தாலும், அடிக்கடி சென்னை வந்து என் தாயார் ஜெயலலிதாவை சந்திப்பேன். கடந்த மார்ச் மாதம் அவரை சந்தித்த போது, என்னை தன் மகன் என்று செப்டம்பர் மாதம் அறிவிக்கப் போவதாக ஜெயலலிதா கூறினார். இதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்து வந்தார். இவையெல்லாம் தற்போது கர்நாடகா மாநில சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நன்றாக தெரியும். இதனால், ஜெயலலிதாவுடன் அவர் தகராறு செய்தார்.

ஜெயலலிதா மரணம்

இந்த நிலையில், என் தாயார் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5ஆம்தேதி அவர் மரணமடைந்தார். என் தாயாருக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு சசிகலாவும், அவரது உறவினர்களும் என்னை அனுமதிக்கவில்லை. டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின் பேரில், அடையாளம் தெரியாத சிலர் என்னை கடத்திச் சென்று, சிறுதாவூர் பங்களாவில் அடைத்து வைத்து கொடுமை செய்தனர். அந்த பங்களாவில் வேலை செய்யும் காவலாளியின் உதவியுடன் அங்கிருந்து தப்பி வந்தேன்.

டிராபிக் ராமசாமி

அதன்பின்னர் என்னுடைய நலவிரும்பிகள் கொடுத்த யோசனையின் அடிப்படையில், டிராபிக் ராமசாமியை கடந்த மாதம் இறுதியில் சந்திக்க சென்றேன். இதை தெரிந்து கொண்ட சசிகலாவின் ஆட்கள், என்.எஸ்.சி. போஸ் சாலையில் வைத்து என்னை தாக்கினார்கள். இதில் நான் படுகாயமடைந்தேன். இதன்பின்னர் கடந்த 11ஆம்தேதி டிராபிக் ராமசாமியை சந்தித்து, சசிகலாவுக்கு எதிராக போராடி, என்னுடைய உரிமையையும், என் தாயாரின் சொத்துக்களையும் மீட்டுத் தரும்படி கேட்டேன்.

பாதுகாப்பு வேண்டும்

டிராபிக் ராமசாமி கொடுத்த அறிவுரையின்படி, தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடந்த 12ஆம்தேதி புகார் மனுவை அனுப்பினேன். தேனாம்பேட்டை போலீசாருக்கும் தனியாக புகார் மனு அனுப்பப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கும், என்னை தத்து எடுத்துள்ள பெற்றோருக்கும் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. தற்போது சசிகலாவின் ஆட்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்கள் தற்போதைய முதல்வரிடம் செல்வாக்கு உள்ளவர்கள். எனவே, எனக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பை வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

நீதிபதி எச்சரிக்கை

இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு கடந்த மார்ச் 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் ராமசாமியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அன்றைய தினமே நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்தார். காவல்துறையினர் விசாரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கைது செய்க

இதனிடையே இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜெயலலிதா மகன் என்று கூறி பாதுகாப்பு கேட்டவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த பத்திரங்கள் போலியானவை என்று போலீஸ் அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்

நீதிபதி உத்தரவு

கிருஷ்ணமூர்த்தி வசந்தாமணியின் மகன்தான் கிருஷ்ணமூர்த்தி என்றும் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தத்து கொடுத்ததாக கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த பத்திரம் போலியானது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி அறிக்கையை ஏப்ரல் 10ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் இன்று டிராபிக் ராமசாமியும், வழக்கு தொடர்ந்த கிருஷ்ணமூர்த்தியும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.