முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது

தி.மு.க. நாளிதழான முரசொலி அலுவலக நில விவகாரம் தொடர்பாக பா.ஜ.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ‘முரசொலி அலுவலக இடத்தை அரசிடம் ஒப்படைத்தால் ௫ கோடி ரூபாய் தருகிறோம்’ என்று பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தி.மு.க. திட்டித் தீர்த்துள்ளது.

‘சென்னையில் முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது’ என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலத்தின் பட்டா ஆவணங்களை ஸ்டாலின் வெளியிட்டதும் ‘மூலப் பத்திரத்தை வெளியிடுங்கள்’ என ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இரு தரப்பிலும் கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் ‘முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதா என தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். பஞ்சமி நிலத்தில் அமைந்திருந்தால் அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டும்’ என பா.ஜ.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

‘முரசொலி அலுவலக நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுத்தால் தி.மு.க.விற்கு ௫ கோடி ரூபாய் தர பா.ஜ. தயார்’ என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவரது கருத்தால் தி.மு.க. மேலிடம் கடும் அதிருப்தி அடைந்தது. வெளியூர் சுற்றுப் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய ஸ்டாலின் நேற்று சென்னை அறிவாலயத்தில் கட்சி முன்னோடிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுக்கும்படி ஆர்.எஸ்.பாரதிக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை:
ஓய்வு அரசியலில் ஒய்யாரமாக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் துணிச்சல் இருந்தால் ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதற்கு வக்கில்லை என்றால் வேறு வழிகளில் தன் கட்சியில் அவர் விரும்பும் தலைவர் பதவியை பெற முயல வேண்டும்.
ஊழல் அ.தி.மு.க. வுடன் இருக்கும் பழக்க தோஷத்தால் பொய்களை உண்மைகளாக்க அவர் புலம்புகிறார். அதுபோன்ற புலம்பலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
முடிந்தால் பஞ்சமி நிலம் குறித்த ஆதாரத்தை வெளியிடுங்கள். அதற்கு நாம் லாயக்குப்பட மாட்டோம் என நீங்கள் கருதினால் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அரசியலிலும் ஓய்வு எடுங்கள்.
அதை விடுத்து வீணாக தி.மு.க. பற்றி பிதற்றினால் அரசியல் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து விடலாம் என கணக்குப் போட்டு எங்களை வீண் வம்புக்கு இழுக்காதீர்கள்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.