மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் – பாக். உள்துறை அமைச்சர்

பயங்கரவாதம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்று பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் விடுக்கும் தொடர்ச்சியான கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான் கானும் பேச்சுவார்த்தைக்கு தயார் என கோரிக்கையை விடுத்து வருகிறார். இருப்பினும் இந்தியா தரப்பில் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றுவது தொடர்பாக இம்ரான் கான் பேசுகையில், ஹபீஸ் சயீத் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையின் பொருளாதாரத் தடை உள்ளது. ஏற்கனவே நடவடிக்கை உள்ளது. இப்போது நீதியின் கீழ் உள்ளது. வெளிநாட்டிற்கு எதிராக பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இருநாடுகளும் முன்னர் நடைபெற்ற சம்பவத்திலேயே நிற்க கூடாது, இப்போதைக்கு ஏற்றவகையில் முன்நகர வேண்டும் என்றார். பயங்கரவாதம் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகள் நண்பர்கள், பாகிஸ்தானுக்கு எதிரானவர்கள் எதிரிகள் என்ற இரட்டை நிலைப்பாட்ட இதுவரையிலான பாகிஸ்தான் அரசுக்கு கொண்டிருந்தது. இம்ரான் கான் ஆட்சியிலும் அதுபோன்ற ஒரு செயல் வெளியே தெரியவந்துள்ளது.

இம்ரான் கான் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறும் நிலையில் அந்நாட்டு உள்துறை இணை அமைச்சர் மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் என கூறிய வீடியோ வெளியாகியுள்ளது.

மில்லி முஸ்லீம் லீக் என்ற ஹபீஸ் சயீத் கட்சியை பதிவு செய்ய அந்நாட்டு தேர்தல் ஆணையம் பதிவு செய்ய மறுத்துவிட்டது. அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக இந்நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதற்கிடையே தேர்தல் ஆணையம் அவ்வமைப்பை பயங்கரவாத இயக்கம் என அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு உள்துறை இணை அமைச்சர் ஷேகர்யார் அப்ரீடியை, ஹபீஸ் சயீத் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி இம்ரான் கானுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் என உள்துறை அமைச்சரே சபதமிட்டுள்ளது. ஹபீஸ் சயீத் மற்றும் அவருடைய கட்சியை பாதுகாப்போம் என அப்ரீடி பேசியுள்ளார்.

“எங்களுடைய கட்சி ஆட்சியிலிருக்கும் வரையில் பாகிஸ்தானுக்காக போராடும் ஹபீஸ் சயீத் போன்றவர்களுக்கு துணை நிற்போம்,” என பேசியுள்ளார் அப்ரீடி. மில்லி முஸ்லீம் லீக் கட்சியை பதிவு செய்ய அனுமதிக்குமாறு அந்நாட்டு கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்கா அதனை பயங்கரவாத இயக்கம் என அறிவித்துள்ளதை குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.