மும்பை அணியை வீழ்த்தியது டில்லி: அமித் மிஸ்ரா அபார பந்துவீச்சு

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (1) ஏமாற்றினார். அவேஷ் கான் பந்தில் சூர்யகுமார் (24) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா, அஷ்வின், ரபாடா, அவேஷ் கான் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார்.

அமித் மிஸ்ரா வீசிய 9வது ஓவரில் ரோகித் (44), ஹர்திக் பாண்ட்யா (0) அவுட்டாகினர். குர்னால் பாண்ட்யா (1) நிலைக்கவில்லை. தொடர்ந்து அசத்திய அமித் மிஸ்ரா ‘சுழலில்’ போலார்டு (2), இஷான் கிஷான் (26) சிக்கினர். ஜெயந்த் யாதவ் (23) ஆறுதல் தந்தார்.
மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தது. பும்ரா (3), பவுல்ட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். அமித் மிஸ்ரா 4 விக்கெட் கைப்பற்றினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா (7) ஏமாற்றினார். பின் இணைந்த ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி பொறுப்பாக ஆடியது. குர்னால் பாண்ட்யா வீசிய 9வது ஓவரில் ஸ்மித் 2 பவுண்டரி அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது போலார்டு பந்தில் ஸ்மித் (33) அவுட்டானார். ராகுல் சகார் வீசிய 15வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த தவான் (45), 5வது பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரிஷாப் பன்ட் (7) நிலைக்கவில்லை. போலார்டு பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹெட்மயர் வெற்றியை உறுதி செய்தார்.

டில்லி அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்து வெற்றி பெற்றது. லலித் யாதவ் (22), ஹெட்மயர் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.