முன் ஜாமின் வழங்க மறுத்த டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனு, நாளை மறுநாள் (ஆக.,23) விசாரிக்கப்படும்

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த முறையீடு நீதிபதி ரமணா முன்னர், விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட அவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விற்கு அனுப்பினார்.

சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் குறைபாடு உள்ளதாகவும் அதனை சரி செய்யும்படி பதிவாளர் தரப்பில் கூறப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு, அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால், சிதம்பரம் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். சிபிஐ சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், மீண்டும் நீதிபதி ரமணா முன் மீண்டும் முறையிட்டார்.

அப்போது நீதிபதி ரமணா, சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை இல்லை. மனுவில் உள்ள குறைபாட்டை சரி செய்து மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். சிதம்பரம் மனு பட்டியலிடப்பட்ட பின்னரே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனக்கூறினார்.

சுப்ரீம் கோர்ட் பதிவாளர், தலைமை நீதிபதியிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. இதனால், பட்டியலில் சேர்க்க முடியாது எனக்கூறினார். பிழைகள் திருத்தப்பட்டாலும் பட்டியலில் சேர்க்கப்படாத மனுவை விசாரிக்க முடியாது என நீதிபதி ரமணா திட்டவட்டமாக கூறி விட்டார்.

முன்னதாக, சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், தங்களுக்கு வேறு வழியில்லை. தப்பிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என சிதம்பரமே கூறி விட்டதால் அவரது முன்ஜாமின் மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என வாதிட்டுள்ளார்.

நீதிபதி ரமணா 2வது முறையாக மனுவை விசாரிக்க மறுத்ததையடுத்து மாலை 4 மணிக்கு, அயோத்தி வழக்கு விசாரணை முடிந்த பிறகு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் மீண்டும் முறையிட முடிவு செய்திருந்தது. ஆனால், அயோத்தி வழக்கு விசாரணைக்கு பின்னர், அந்த அமர்வு கலைந்து சென்றது.
தலைமை நீதிபதி தனது அறைக்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து தலைமை நீதிபதியுடன், பதிவாளர் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், பதிவாளருடன், சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள்(ஆக.,23) விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement