முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பா ஜ கா வில் இணைந்தார் !!

தென்னிந்திய திரைப்பட உலகில் பிரபலமானவராக வலம் வந்த நடிகையும் முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி (54) பாரதிய ஜனதா கட்சியில் திங்கட்கிழமை முறைப்படி இணைந்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கிய நிலையில், கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக விஜயசாந்தி அறிவித்தார்.

இதையடுத்து டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த விஜயசாந்தி, திங்கட்கிழமை பிற்பகலில் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை உறுதிப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தேசிய செயலாளர் அருண் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் திங்கட்கிழமை பாஜக உறுப்பினரானார்.

இதையடுத்து தெலங்கானா மாநிலத்துக்கு திரும்பி உடனடியாக கட்சியின் பிரசார நடவடிக்கைகளை தொடங்குமாறு அவரை கட்சியின் மேலிட தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை திங்கட்கிழமை சந்தித்த பிறகு நடிகை விஜயசாந்தி தனது தேர்தல் பிரசார பணிகளை தொடங்கவிருக்கிறார்.