முன்னாள் கல்வி அதிகாரி எஸ் சிவநாயகமூர்த்தி அவர்களின் இரு நூலகள்: வெளியீட்டு விழா

கலாநிதி எஸ்.சிவநாயகமூர்த்தி அவர்கள் எழுதிய ‘தமிழர் மரபும்,புலம்யெர் வாழ்வும்”; சீவகசிந்தாமணியும் அதன் இலக்கியச் சுவையும்” என்ற இருநூல்களும் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா பெரிய சிவன்கோவில் மண்டபத்தில் பேராசிரியர் இ.பாலசுந்தரம் தலைமையில் வெகு சிறப்பாக வெளியிடப் பட்டன. குத்து விளக்கேற்றல்,கனடா தேசீய கீதம்,தமிழ்த்தாய் வாழ்த்து,அமைதி வணக்கம் என்பவற்றுடன் ஆரம்பமாகியது. அதன் பின்னர் காவியாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின்.வரவேற்பு நடனம்,எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களது வரவேற்புரை, கவிஞர் கழக முன்னாள் தலைவர் திரு.சி.சண்முகராசா அவர்களின் வாழ்த்துரை என்பன இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து கனடா தேசீய கீதம் பாடிய ஆஞ்சனா சத்தி வடிவேல்,தமிழ்தாய் வாழ்த்துப் பாடிய சங்கவி முகுந்தன்ஆகியோரும்,வரவேற்பு நடனமாடிய காவியாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளும், அப்பள்ளி ஆசிரியை திருமதி. ஜெயதீஸ்வரி பாலமுகுந்தன் அவர்களும், எழுத்தாளர் இணையத் தலைவர் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்களாலும், பெரிய சிவன் கோயில் குருக்கள் அவர்களாலும் பாராட்டு விருதுகள் அளித்துக் கௌரவிக்கப் பட்டனர்.இவற்றுக்கான முதல் அழைப்புக்களை கவிஞர் கழகத் தலைவர் திரு ஞான கணேசன் சிறப்பாகச் செய்தார்
அதைத் தொடர்ந்து பேராசிரியர் பாலசுந்தரம் -எழுத்தாளர் இணையத் தலைவர், அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து, இடைவேளைக்குப் பின்னர் தமிழர்மரபும், புலம் பெயர் வாழ்வும் என்ற நூலின் வெளியீட்டுரையைத் திரு.சின்னையா சிவநேசன்- முன்னாள் அதிபர் அவர்கள் நிகழ்த்தினார்.அதைத் தொடர்ந்து அந்நூல் பற்றிய நயவுரையை முன்னாள் கோப்பாய் ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளர் திரு.சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் அவர்கள் நயமாக வழங்கினார்.
சீவகசிந்தாமணியும் அதன் இலக்கியச்சுவையும் என்ற நூலின் வெளியீட்டுரையை கவிநாயகர் கந்தவனம் அவர்கள் நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து அந்நூலுக்கான நயவுரையை வைத்தியக் கலாநிதி செல்வி மேரி,கியூரி போல் அவர்கள் சிறப்பாக நிகழ்த்தினார். பின்னர் நூல் வெளியீட்டைக் கவிநாயகர் கந்தவனம் நடத்தினார். சிறப்புப் பிரதிகளை பொறியியலாளர் திரு. சோமலிங்கம் அவர்கள்,வைத்தியக்கலாநிதி,பூமா மனோகரன்,கல்விப் பணிப்பாளர் திரு கந்தசாமி,வைத்தியக் கலாநிதி போல் யோசெப்,எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.