முதல்-அமைச்சர், பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? 2 அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஆகும்.

இந்த கோரிக்கையை அமைச்சர்கள் ஏற்று நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர். இதை ஏற்று அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்குவதாக தினகரனும் அறிவித்து இருக்கிறார்.

இணைப்பு முயற்சி

இதைத்தொடர்ந்து பிரிந்து இருக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி இருக்கிறது.

அ.தி.மு.க. இரு அணிகள் இணைவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய அணியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வை இணைப்பதற்காக அ.தி.மு.க. அம்மா கட்சியினர் அமைத்துள்ள குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 5 அல்லது 6 பேர் கொண்ட குழு அமைக் கப்படும் என்று தெரிகிறது.

இந்த குழுவினர் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அ.தி.மு.க. அம்மா கட்சி குழுவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அ.தி.மு.க.வை இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கோஷ்டி மனப்பான்மை

சமரச பேச்சுவார்த்தையின் போது இரு அணியினரும் பல்வேறு நிபந்தனைகளை முன் வைக்க உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று அவருடைய அணியினர் தீவிரமாக உள்ளனர். அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சராக நீடிப்பார் என்றும் அ.தி.மு.க. அம்மா கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

கட்சி ஒன்றாக இணைந்த பின்னர் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் ஒற்றுமையாக இருந்தது போன்று அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். கோஷ்டி மனப்பான்மை வரக்கூடாது என்பதில் அ.தி.மு.க. அம்மா கட்சி குழுவினர் தனிக்கவனம் செலுத்தி உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி.பன்னீர்செல்வம் சந்திப்பு

அ.தி.மு.க. இரு அணிகளை சேர்ந்த தலைவர்களும் நாளை பேச்சுவார்த்தை தொடங்க உள்ள அதே வேளையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேச ஏதுவான சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இருவரும் சந்தித்து பேசினால் சுமுகமான முடிவு எடுக்கப்பட்டு அ.தி.மு.க. இணைப்பு உடனடியாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிபந்தனைகள் என்னென்ன?

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது அ.தி.மு.க. (அம்மா) கட்சி குழுவினரிடம், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் கீழ்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

* எம்.ஜி.ஆர்.வகுத்து தந்த அ.தி.மு.க. சட்டத்திட்ட விதிகளின் படி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தொடங்க வேண்டும். அதுவரையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும்.

* ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

* சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா’ இல்லத்தை அரசுடமையாக்கி நினைவு இல்லம் ஆக்க வேண்டும்.

பா...வுடன் கூட்டணி

* ஜெயலலிதா தனக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வத்தை தான் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தார். எனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் பதவியை வழங்க வேண்டும். துணை முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை பொறுப்பை அவரே வைத்துக்கொள்ளலாம்.

* எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, மாபா பாண்டியராஜனுக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டும்.

* பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வற்புறுத்துவதாக தெரிகிறது.