முதல்வர் உடல்நிலையை விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு 2-வது முறையாக ஆளுநர் வருகை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (சனிக்கிழமை) அப்போலோ மருத்துவமனை வந்தார்.

முன்னதாக அவர் அக்டோபர் 1-ம் தேதி மருத்துவமனைக்கு வந்து முதல்வர் நலனை விசாரித்துச் சென்றார். தற்போது 2-வது முறையாக அவர் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். அரை மணி நேரம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடி மருத்துவர்களிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா,கடந்த செப்டம்பர் 22-ம் தேதியன்று சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்களும் வெளியாகின. இதனையடுத்து,மருத்துவமனையின் சார்பில் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட மருத்துவக் குறிப்புகளில் முதல்வருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியல்,டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்,சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவர்கள் ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது.

இந்நிலையில்,முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (சனிக்கிழமை) கேட்டறிந்தார். முன்னதாக கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கேட்டறிந்தார். பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. முதல்வர் உடல்நிலை தொடர்பாக பல்வேறு வதந்திகள் வெளியாகிவந்த நிலையில் ஆளுநர் மருத்துவமனைக்கு நேரில் சென்றுவந்து அறிக்கை வெளியிட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்நிலையில்,தற்போது இரண்டாவது முறையாக இன்று (சனிக்கிழமை) ஆளுநர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

ஒரு வாரத்துக்குப் பின் அறிக்கை:

முன்னதாக,அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் டாக்டர் என்.சத்தியபாமா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,”முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் வெப்ப நிலை,நாடித் துடிப்பு,இதயத் துடிப்பு,ரத்த அழுத்தம் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாச உதவியுடன்,பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு குழுவினர்,மூத்த இதய சிகிச்சை நிபுணர்கள்,மூத்த சுவாச சிகிச்சை நிபுணர்கள்,மூத்த தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள்,நாளமில்லா சுரப்பி மற்றும் சர்க்கரைநோய் நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர். தற்போது முதல்வர் புரிந்து கொண்டு செயல்படுகிறார். அவரது உடல்நிலையில் சீராக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.