மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் 3-வது நாளாக போராட்டம்: மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் நேற்று 3-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் மீனவர்கள் மெழுகுவத்தி ஏந்தி பிரிட்ஜோவுக்கு அஞ்சலி செலுத்தி னர்.

கச்சத்தீவு அருகே திங்கள் கிழமை இரவு ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ(21) உயிரிழந்தார். ஜெரோன்(27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமேசுவரம் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனைக் குப் பின்னர் பிரிட்ஜோவின் உடலை மருத்துவமனை அதிகாரிகள் ஒப்படைக்க முயன்றபோது பெற் றோரும், உறவினரும் உடலை வாங்க மறுத்தனர். இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை தங்கச்சிமடத்தில் தர்ணா போராட் டம் தொடங்கப்பட்டு புதன்கிழமை இரவிலும் நடைபெற்றது.

முன்னதாக புதன்கிழமை மாலை கொழும்பில் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் தலைமையில் இரு நாட்டு உயரதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தையின்போது இலங்கை சிறைகளில் உள்ள 85 தமிழக மீனவர்களையும், இந்திய சிறைகளில் உள்ள 15 இலங்கை மீனவர்களையும் பரஸ்பரம் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது நாளாக நேற்று தங்கச்சிமடத்தில் மீனவர் பிரிட் ஜோவுக்கு மீனவர்கள் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி போராட் டத்தை தொடர்ந்தனர். இந்தப் போராட்டத்தில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும். இறந்த மீனவரின் குடும் பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடாக இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன், கூடங்குளம் போராட்டக் குழு தலைவர் சுப.உதயகுமார், தேசிய சுற்றுச் சூழல் அறக் கட்டளையைச் சேர்ந்த பாத்திமா பாபு ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். மாணவர் களும், இளைஞர்களும், தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து திரளான மீனவர்களும் கலந்துகொண்டனர்.

உடலை பெற மறுப்பு

மீனவர் பிரிட்ஜோவின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு ராமநாத புரம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் நேரில் வலியுறுத்தினாலும் உறவி னர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். இதனால் ராமேசுவரம் மருத்துவ மனையில் பாதுகாப்புப் பணி யில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.