மீண்டும் 1989 ஃபார்முலாவுக்கு தயாராகிறார்: அணிகள் இணைப்பு முயற்சியில் பின்வாங்கிய ஓபிஎஸ்

அதிமுக அணிகளை இணைக்கும் முடிவில் இருந்து ஓபிஎஸ் பின்வாங்கிவிட்டார். இனி இணைப்புக்கு வேலை இல்லை என அவருக்கு மிக நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும், சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து அடியோடு விலக்கி வைக்க வேண்டும் என்ற 2 நிபந்தனைகளைதான் அதிமுக அணிகள் இணைப்புக்கு பிரதானமாக முன்வைத்தார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கு உறுதி யான பதிலை எடப்பாடி பழனிசாமி அணி இதுவரை அளிக்கவில்லை. மாறாக, ‘ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு நீதிமன்ற விசார ணையில் இருப்பதால் இப்போ தைக்கு அது தொடர்பாக எதுவும் செய்ய முடியாது’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட வர்கள் பேசி வருகின்றனர்.
ஒருபக்கம் ஓபிஎஸ் அணியுடன் இணக்கமாக போவதாக காட்டிக் கொண்டே இன்னொரு பக்கம், ‘நாங்களே அங்கீகரிக்கப்பட்ட அதிமுக’ என்பதை தேர்தல் ஆணையத்தில் நிலைநிறுத்தவும் சசிகலா, தினகரன் உள்ளிட்ட வர்களை கட்சிக்குள் தக்கவைப் பதற்கான வேலைகளையும் மறைமுகமாகச் செய்து வருகிறது எடப்பாடி அணி. அதனால்தான், ‘இனி அணிகள் இணைப்பு சாத்தியமில்லை. தமிழக சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும்’ என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் ஓபிஎஸ்.
இதுகுறித்து ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சசிகலா தரப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால்தான் கட்சியின் அடிமட்ட தொண்டர் களிடம் ஓபிஎஸ்ஸுக்கு செல்வாக்கு பெருகியது. இந்நிலையில், சசிகலா தரப்பின் பினாமியாக செயல்படும் எடப்பாடி அணியோடு இணைவ தற்கு ஓபிஎஸ் எடுத்த முடிவை தொண்டர்கள் ரசிக்கவில்லை. ‘அவர்களுக்கு காரியம் ஆகவேண் டும் என்பதற்காக காலை பிடிக்கிறார்கள். இதை நம்பிப் போனால் சசிகலா தரப்பு உங்களை முகவரி இல்லாமல் செய்துவிடும்’ என்று போகுமிடமெல்லாம் தொண்டர்கள் ஓபிஎஸ்ஸிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
திஹாருக்கு போன எல்எல்ஏக்கள்
இதையெல்லாம் உணர்ந்துதான் இணைப்பு முயற்சியில் இருந்து ஓபிஎஸ் பின்வாங்கிவிட்டார். தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டதாக சொல்கின் றனர். ஆனால், அதிமுக எம்எல்ஏக் களான வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் உள்ளிட்டவர்கள் திஹார் சிறைக்கே சென்று அவரை சந்திக்கிறார்கள். மதுரையில் முதல் வர் கலந்துகொண்ட விழாவை புறக்கணித்துவிட்டு டெல்லிக்கு போயிருக்கிறார் தங்கதமிழ் செல்வன்.
தினகரன் கைதானதை கண்டித்து கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். தினகரனை ஒதுக்கி வைத்தது உண்மையாக இருந்தால் இவர்கள் மீதெல்லாம் கட்சி நட வடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்ய வில்லை.
இப்படி நாடகமாடுபவர்களுடன் மீண்டும் இணைந்தால் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு சரிந்துவிடும். பேச்சு வார்த்தையை இழுத்துக் கொண்டே, எடப்பாடி அரசுடன் மத்திய அரசு இணக்கமாக இருப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி தொண்டர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். ஆனால், எதார்த்தம் அப்படி இல்லை.
நிதி ஆயோக் கூட்டத்துக்காக டெல்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திக்க முயற்சித்தார். ஆனால், பாஜக முதல்வர்களை எல்லாம் சந்தித்த மோடி, எடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்துவிட்டார். அதேநேரத்தில், அதிமுக எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டார்ஜியின் மகன் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி சென்றிருந்த ஓபிஎஸ்ஸுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தனியே ஆலோசனை நடத்தினார்.
1989 ஃபார்முலா
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவே பாஜக இன்றளவும் இருக்கிறது. அந்த தைரியத்தில்தான் சட்டப் பேரவைக்கு தேர்தல் வந்தால் சந்திக்கலாம் என கருதுகிறார். 1989-ல் அதிமுக இரு அணிகளாக தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தலில் ஜெ. அணிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக நிரூபிக்கப்பட்டதால் ஜெயலலிதா தலைமையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தது.
அதுபோல, அடுத்துவரும் தேர்தலை அதிமுகவின் இரு அணிகளும் தனித்தனியாகவே சந்திப்போம். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும். அப்போது, தனது தலைமையில் அதிமுக தானாகவே ஒன்றி ணைந்துவிடும். சசிகலா கோஷ்டி யும் ஒதுங்கிவிடும். இந்தத் திட்டத் துடன்தான் ஓபிஎஸ் இப்போது காய்நகர்த்துகிறார்.
இவ்வாறு ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
தினகரனை சந்தித்தது ஏன்?
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியான தளவாய் சுந்தரத்தின் முயற்சியில்தான் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் கடந்த 5-ம் தேதி திஹார் சிறையில் தினகரனை சந்தித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து வெற்றிவேல் எம்எல்ஏவிடம் கேட்டபோது, ‘‘நான், தங்கதமிழ்செல்வன், கோவை எம்.பி.நாகராஜன் உள்ளிட்டவர்கள் தினகரனை திஹார் சிறையில் சந்தித்துப் பேசியது உண்மைதான். எங்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாகவே அவரை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்தோம். வேறு எதுவும் பேசவில்லை’’ என்றார்.