மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் இறுதியில் ஊழல்வாதி எனப் பெயரெடுத்தார்

துரியோதனின் அழிவுக்கு அவனது ஆணவமே காரணம் என முன்னாள் பிரதமர் ராஜீவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு, பிரியங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், பிரசாரம் ஒன்றில், பிரதமர் மோடி பேசுகையில், மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் இறுதியில் ஊழல்வாதி எனப் பெயரெடுத்தார் என பேசியிருந்தார். இதற்கு காங்., மற்றும் பிற கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் நடந்த பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: பிரதமர் மோடிக்கு வேறு பிரச்னை கிடைக்காததால் எனது குடும்பத்தை அவமதித்துள்ளார். இந்த நாடு ஆணவம் கொண்டவர்களை என்றும் மன்னிக்காது. வரலாற்றில் இதற்கு உதாரணம் உள்ளது.

மகாபாரத்தில் துரியோதனின் அழிவுக்கு அவனது ஆணவமே காரணம். துரியோதனனிடம் கிருஷ்ண பகவான் பேச முயற்சித்த போது, ஆணவ குணம் கொண்ட துரியோதனன், கிருஷ்ணரை சிறை பிடிக்க முயற்சித்தான். அந்த ஆணவ குணம் தான் பிரதமர் மோடியிடமும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், மேற்கு வங்க மாநிலம் பிஷ்னாபூரில் நடந்த பிரசாரத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசுகையில், ‘பிரதமர் மோடியை துரியோதனன் என பிரியங்கா அழைக்கிறார். நமது ஜனநாயக நாட்டில் நீங்கள் ஒருவரை துரியோதனன் என அழைத்தால், அவர் துரியோதனன் ஆகி விட மாட்டார். மே 23ம் தேதி துரியோதனன் யார்; அர்ஜூனன் யார் என்பது தெரிந்துவிடும்.’ இவ்வாறு அவர் பேசினார்.