மியான்மரில் ராணுவ ஆட்சி சூச்சி கைதால் பெரும் பதற்றம்

மியான்மர் நாட்டில், அரசு நிர்வாகத்தை, ராணுவம் நேற்று அதிரடியாக தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி உட்பட பலரும் கைது செய்யப்பட்டதால், பெரும் பதற்றம் நிலவுகிறது.

மியான்மரில், கடந்த நவம்பர் மாதம், பொதுத் தேர்தல் நடந்தது. பார்லிமென்டின் இரு சபைகளிலும் மொத்தமுள்ள, 476 இடங்களில், 396 இடங்களைக் கைப்பற்றி, ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி, அமோக வெற்றி பெற்றது. இது, 2015 பொதுத் தேர்தலில் வென்ற இடங்களைக் காட்டிலும் அதிகம். ராணுவ கட்சியாக கருதப்படும், ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி, 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.இதையடுத்து, தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக, ராணுவத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வத்து வந்தனர்.

எனினும், அதற்கான ஆதாரங்களை, அவர்களால் சமர்ப்பிக்க முடியாமல் போனது. ராணுவத்தின் குற்றச்சாட்டுகளை, மியான்மர் தேர்தல் ஆணையமும், கடந்த வாரம் நிராகரித்தது.பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வந்த நிலையில், மியான்மர் அரசை, ராணுவம் நேற்று அதிரடியாக கைப்பற்றியது. ராணுவத்தால் நிர்வகிக்கப்படும், ‘மியாவாடி டிவி’ சேனல் வாயிலாக, அந்த செய்தி, நேற்று காலை, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ‘அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு, ராணுவ கட்டுப்பாட்டின்கீழ், அரசு இருக்கும்’ என, அறிவிக்கப் பட்டுள்ளது.

இதைத்தவிர, அரசு ஆலோசகரான ஆங் சான் சூச்சி, 75, நாட்டின் அதிபர் யு வின் மியின்ட் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை, ராணுவத்தினர், வீட்டுக் காவலில் வைத்து உள்ளனர். தலைநகர் நேபியுடா முழுதும், தகவல் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், மியான்மரில், பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.மியான்மரில், ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதற்கு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி கூறியதாவது:மியான்மரில், ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் வகையில், பல நடவடிக்கைகளை ராணுவம் எடுத்துள்ளது. அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி உட்பட பலரும், கைது செய்யப்பட்டு உள்ளனர். மியான்மர் நாட்டின் தேர்தல் முடிவுகளை மாற்ற முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த நடவடிக்கைகளை திரும்பப் பெறாவிட்டால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மத்திய அரசு கவலைமியான்மர் ராணுவ புரட்சி குறித்து, இந்திய வெளியுறவுத் துறை, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மியான்மரில் நடந்துவரும் நிகழ்வுகளை, மிகுந்த கவலையுடன் கவனித்து வருகிறோம். நாட்டின் சட்ட மற்றும் ஜனநாயக நடைமுறைகள் உறுதிபடுத்தப்படும் என, நம்புகிறோம். மியான்மர் நாட்டின் ஜனநாயக முறைகளுக்கு, இந்தியா என்றும் ஆதரவாக இருக்கும். நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.

ஐ.நா., கடும் கண்டனம்ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது: மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி, அதிபர் யு வின் மியின்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப் பட்டுள்ளதற்கு, கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். ஆட்சி அதிகாரம், ராணுவத்தின் வசம் சென்றுள்ளது, கவலை அளிக்கிறது. இந்த நிகழ்வுகள், மியான்மரின் ஜனநாயக சீர்த்திருத்தங்கள் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.