மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு உத்தரவு

பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக தலைமை செயலர் ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில், டிஜிபி, கூடுதல் தலைமை செயலர், வருவாய் துறை ஆணையர், முதன்மை தேர்தல் அலுவலர், முதன்மை செயலாளர்(பொது, சுகாதாரம்) தமிழக மருத்துவ பணிகள் கழகம், மேலாண்மை இயக்குநர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஷ் கமிஷனர் பொது சுகாதார துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவு:

1. பொது இடங்களில் பொது மக்கள் மாஸ்க் அணிவதையும், நிலையான நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத்துறை, காவல் துறை, வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் வசூலிக்க வேண்டும்.
2. அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கு என ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தெளிவான நெறிமுறைகள்படி, கிருமி நாசினி உள்ளதா எனவும், மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

3. மேற்கண்ட நெறிமுறைகள், அனைத்து இடுங்களிலும்( நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், த திருமண மண்டபங்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்படுகிறதா என சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் கண்காணிக்க வேண்டு்.

4. கட்டுப்பாட்டு பகுதிகளின் நெறிமுறைகளாகிய மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் கூடும் இடங்களாகிய பொது குழாய் இருக்கும் இடம், பொது கழிப்பிடம் போன்ற இடங்களில் கண்கூடாக தெரியும்படி கிருமி நாசினி தெளித்தல் போன் றந நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்

5. கொரோனா தொற்று உள்ளவர்களின் தொடர்பி் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து மாதிரிகள் எடுக்க வேண்டும். தொற்று உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் தாமதமின்றி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

6. கூட்டாக நோய் தொற்று ஏற்படும் பகுதிகளில் உரிய அலுவலர்களை நியமித்துஅதுனை உறுதி செய்து தகுந்த நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

7. காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

8. நோய் தொற்று உள்ள இடங்களில் நோய் தொற்றை தடுக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

9. தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இதனை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

10. வீட்டில் தனிமைபடுத்தப்பட்ட நபர்களை கடந்த ஆண்டை போல் கண்காணிக்க வேண்டும்.

11. மக்கள் அதிகம் கூடும் தேர்தல் பிரசார கூட்டங்கள், கலாச்சார, வழிபாட்டு மற்றும் இன்னபிற கூட்டங்களுக்கு பொது மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயம் என நிபந்தனை விதித்து அனுமதி அளிக்க வேண்டும். அதனை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.

12. மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளின் முக்கிய பங்காக கொரோனா தடுப்பு பணிகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் அளித்து நோய் தொற்றை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர்கள் தொடர்ந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.