மாவோயிஸ்ட் தாக்குதல்: 16 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தை பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்து தாக்குதல் நடத்தியதை போன்று மகாராஷ்டிராவில் கமாண்டோக்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில், 16 கமாண்டோ படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு வீசி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வாகன டிரைவரும் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.

முன்னதாக நேற்று பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீவைத்து மாவோயிஸ்டுகள் எரித்துள்ளனர். இன்று காலை சாலை கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 25 வாகனங்களையும் மாவோயிஸ்டுகள் அடித்து நொருக்கி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை கொண்டாட அம்மாநிலம் முழுவதும் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில் மாவோஸ்டுகளின் இந்த வெறிச் செயல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.