மாண்புமிகு வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதிலேயே தமிழர் தலைமை தீவிரம் காட்டுகின்றதே தவிர வேறொன்றும் அங்கு இடம்பெறவில்லை!

தமிழ் அரசியல்வாதிகளை நம்பி இனிப் பிரயோசனம் இல்லை என்பது தெரிந்த விடய மாயிற்று. அதற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியோ அன்றி தமிழத் தேசிய கூட்டமைப்போ, இரண்டு அரசியல் பீடங்களின் முக்கிய பணியாக உள்ளது, எப்படி மாண்பு மிகு வடக்கு முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்களை மீண்டும் முதலமைச்சராவதைத் தடுப்பது என்பது தான்.
கடந்த வாரம் கனடாவிற்கு வருகை தந்த யாழ்ப்பாண மாநகர சபையின் நகரபிதா (மேயர்) திரு ஆனோல்ட் உடனான சில மணி நேர சந்திப்பின் போது கனடா உதயன் ஆசிரிய பீடம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் இவைதான்.
“அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ்ப்பான மேயராக இருந்தபோது அவர் தென்னிலங்கை ஆட்சியாளர்களோடு கைகோர்த்து நின்று நல்லதையும் தீயவற்றையும் செய்தார். அதேபோல் தற்போது யாழ்ப்பாண மேயரான நீங்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செல்லும் வழியில் அரசோடு கைகோர்த்துச் செல்லுவதே சிறந்த வழி என்று கூறி அவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள். ஆனால் நீங்கள் நன்மை பயக்கும் விடயங்களையா அன்றி எமது மக்களுக்கு தீமை பயக்கும் விடயங்களையா ஆற்றுகின்றீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். காரணம் உங்களை தெரிவு செய்த மக்களும் இதைத் தான் உற்றுக் கவனிப்பார்கள்” என்று எமது கருத்தை பகிர்ந்து கொண்டோம்.
அவரும் தொடர்ந்து தனது கருத்துக்;களை மிகவும் தெளிவாகக் கூறிய வண்ணம் இருந்து பின்னர் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது கட்சிக்கும் மாகாண சபை அங்கத்தவர்களும் இழைத்த “தவறுகளை” சுட்டிக்காட்டியே மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். ஒரு சில நிமிட உரையாடல் நேரத்தில் கூட அவரால் முதலமைச்சர் மீது கண்டனங்களைத் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை.
இது யாழ்ப்பாண மேயர் அவர்களின் தவறா அல்லது அவரை வழி நடத்துகின்ற தமிழரசுக் கட்சியின் தவறா என்பதை அப்போது அங்கிருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.

இவ்வாறு தமிழ் அரசியல் தரப்பு தனித்து வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதில் தீவிரம் காட்டு கின்றதே தவிர மற்றும்படி அவர்களால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.
ஆனாலும் வடக்:கு மாகாண மக்கள் கேட்பதெல்லாம் எதிர்க்கட் சித் தலைவர் பதவி மூலம் அரசாங்கத் துக்கு முண்டுகொடுப்பது நீங்கள்; இதுவரை அரசாங்கத்தை எதிர்த்துப் பேசாத எதிர்க்கட்சி நீங்கள். நாம் கேட்பதெல்லாம் நீங்கள் சாதித்தது என்ன என்பதுதான்?
ஆங்கு தமிழர் தாயகத்தில் படையினரும் அரசாங்கமும் சிங்களப் பேரினவாதமும் செய்ய நினைத்த அத்தனையையும் செய்கி றதே! இதனைத் தடுக்க உங்களால் முடிந்ததா? என்று தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கேட்ட வண்ணம் உள்ளார்கள்.

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக் களித்தீர்கள். பிரதமர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கிறீர் கள். ஆனால் முல்லைத்தீவில் சிங்களவர்களு க்கு காணி கொடுப்பதை உங்களால் எதிர்க்கவும் முடியவில்லை – தடுக்கவும் முடியவில்லை. இது ஏன் என்றும் தொடர்ந்து கேட்டவண்ணம் மக்கள் உள்ளார்கள்

இது உங்கள் சார்ந்தது என்றால், வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் களிடம் கேள்வி கேட்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் கட்சி சார்ந்தவர்கள் இவைபற்றி கூட்டமைப்பின் தலைமையிடமோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடமோ அன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடமோ கேட்காதது ஏன் என்றும் மக்கள்; தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளார்கள்

ஆகையால் உயிரைத் தியாகம் செய்த எம் இனம் பேசாதிருக்க முடியாது. எங்கெல்லாம் ஆக்கிரமிப்பும் கபடத்தனமும் நடக்கிறதோ அதனை அகிம்சை வழியில் எதிர்க்க மக்கள் கணப்பொழுதில் தயாராக வேண்டும். இந்தத் தயார் நிலை மூன்று வருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்டது. அதன் விளை வாகவே கேப்பாப்பிலவு மக்கள் தங்கள் வாழ் விடங்களுக்குச் செல்ல முடிந்தது. ஆகையால் முல்லைத்தீவில் சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்த்து மக்கள் பேச வேண்டும். அதற்கு தமிழ் அமைப்புக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவது மிக மிக அவசியம்.
தவிர, அடுத்த தமிழ்த் தலைமை பற்றி இப் போதே சிந்தித்து தமிழ் மக்களோடு – தமிழ் மக்களுக்காக நிற்கின்றவர்களை மையப் படுத்தி புதிய அரசியல் தலைமையையும் உரு வாக்க வேண்டும். தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் அங்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிரான கருத்துக்களை பரப்புவதிலேயே கவனம் செலுத்துகின்றார்கள். ஏனென்றால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சராக திரு விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூலமாகவோ அன்றி வேறு எந்த அணியில் ஊடாகவோ முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்டால் தங்கள் அரசியல் வியாபாரத்தை தொடர்ந்து செய்ய முடியாது என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் பலருக்கு உள்ள கவலையும் பயமும் என்பதை புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். இது தான் உண்மை!