மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மோடி அரசு தடை: ஜூன் 2 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாடுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மத்திய அரசு தடை விதித்து வெளியிட்டுள்ள அறிவிக்கையை அடுத்து ஜூன் 2-ம் தேதி தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மத்திய அரசு தடை விதித்திருப்பது மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு சமம். இந்த அறிவிப்பை உடனடியாக பாஜக அரசு திரும்பப்பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். மத்தியில் ஆளும் மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத அறிவிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஜூன் 2 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒருவர் தனக்குச் சொந்தமான மாட்டையோ அல்லது வேறு கால்நடையையோ விற்கவேண்டுமென்றால் அதை ‘விவசாய வேலைகளில் பயன்படுத்துவதற்காகத்தான் விற்கிறேன் இறைச்சிக்காக விற்கவில்லை’ என உறுதிமொழி அளித்து வருவாய் அலுவலரிடமும், மாவட்ட கால்நடை அலுவலரிடமும், மாடு மற்றும் கால்நடை விற்பனையை ஒழுங்குசெய்யும் குழுவின் பொறுப்பாளரிடத்திலும் அனுமதி பெறவேண்டும். வாங்குபவரும் அதைப்போலவே உறுதிமொழி அளித்து அனுமதி வாங்கவேண்டும். தனது சொந்த மாட்டை விற்பதற்கு இப்படி ஒவ்வொருவரிடமாகச் சென்று அனுமதி பெறவேண்டும் என்பது மக்களின் அன்றாட வாழ்வையே சிதைத்து சின்னா பின்னமாக்கிவிடும்.
மிருகவதைத் தடுப்பு சட்டம் 1960ன் கீழ்தான் இப்போதைய விதிகள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. மிருகவதைத் தடுப்பு சட்டத்தின் பிரிவு 11 விலங்குகளை உணவுக்காகக் கொல்வதை அனுமதிக்கிறது. அந்த சட்டத்துக்கு மாறாக இப்போதைய விதிகள் இயற்றப்பட்டுள்ளன. ஒரு சட்டத்துக்கு மாறாக அந்த சட்டத்துக்கான விதிகளை இயற்றமுடியாது. எனவே இது சட்டப்படி செல்லத்தக்கதல்ல.
பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் கிரிமினல் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களை மிரட்டிப் பணம் பறிப்பது, அவர்களைப் படுகொலை செய்வது என வெறியாட்டம் நடத்திவருகின்றனர். ‘பசு பாதுகாப்பு என்ற பெயரில் கிரிமினல்கள் பகல்வேடம் போடுகிறார்கள்’ எனப் பிரதமர் நரேந்திர மோடியே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் குற்றம்சாட்டிப் பேசினார். இப்போது அவரது அரசு போட்டுள்ள ஆணை அந்தக் கிரிமினல்களுக்கு லைசென்ஸ் வழங்குவதைப்போல இருக்கிறது.
தற்போது பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் காரணமாக மாட்டை விற்பவரும், அதை வாங்குகிறவரும் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்குவதற்கும், கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புகொண்ட சொத்துகளை வாங்குவதற்கும் விற்பதற்கும்கூட இந்த அளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்பதைப் பார்க்கும்போது இந்த அரசின் ஆணை எந்த அளவுக்குக் கேலிக்கூத்தாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்த உத்தரவின் மூலம், மாட்டை வெட்டுவதற்காகத்தான் கொண்டுபோகிறார் எனக் குற்றம்சாட்டி எவர் ஒருவரையும் அடித்துக் கொலை செய்வதற்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்துள்ளது மோடி அரசு. ஒட்டுமொத்த மக்களையும் கண்காணிக்கிறவர் கண்காணிக்கப்படுபவர் என இரண்டாகப் பிரித்து அவர்களுக்குள் மோதலை ஊக்குவிப்பதன்மூலம் மோடி அரசு ஒரு உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டியுள்ளது.
மோடி அரசின் உத்தரவு மக்களின் உணவுப் பழக்கத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிவில் சமூகத்தின்மீதான தாக்குதல். இந்தப் பாசிச அபாயத்தை எதிர்த்து முறியடிப்பதன்மூலமே இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்.
மாடு விற்பதைக் கண்காணிக்க மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்படும் என்ற மோடி அரசின் உத்தரவு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. மைய அரசின் இந்த வெகுமக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள அரசைப் போல தமிழக அரசும் இதனை கடுமையாக எதிர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆடு கோழி பலியிடத் தடை விதித்து சட்டம் இயற்றினார், மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அந்த சட்டத்தை அவரே திரும்பப் பெற்றார். அதைப் போல மோடி அரசும் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறும்வரை மக்கள் போராட்டம் ஓயாது.
தான் பதவியேற்று மூன்றாண்டுகள் முடிந்துள்ள நிலையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலோ, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலோ மோடி அரசு அக்கறை காட்டவில்லை. அதற்கு மாறாக மக்களை பிளவுபடுத்துவதிலும் வகுப்புவாத வெறியை வளர்ப்பதிலும் நாட்டமாக உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவையும் கற்காலத்தை நோக்கி இழுத்துச் சென்றுகொண்டிருக்கும் மோடி அரசின் வகுப்புவாத செயல்திட்டத்தை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரளவேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.