மஹிந்த ராஜபக்ஷ: “யுத்தம் நிறைவடைந்த தருணத்திலேயே, நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டது”

இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் – பலாலியில் புனரமைக்கப்படவுள்ள விமானம் நிலையம், சர்வதேச விமான நிலையம் என அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் வர்த்தக சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முடியாத அரசாங்கத்தினால், மற்றுமொரு சர்வதேச விமான நிலையத்தை நிறுவுவதற்கான திறன் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 1988 – 1989 காலப் பகுதியில் நாட்டிற்குள் ஏற்பட்ட வன்முறையுடனான காலப் பகுதியொன்று மீண்டும் நாட்டில் உருவாகி வருவதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது பல கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, யுத்தம் நிறைவுக்கு கொண்டு வந்த தருணம் முதலே, நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டமை மாத்திரமன்றி, தெற்கு மற்றும் வடக்கு மக்களுக்கு எவ்வித அச்சமும், சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான சூழலை, தமது அரசாங்கம் அன்றே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் இதன்போது நினைவூட்டியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே, தமது அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் வர்த்தகர்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற எண்ணம் சிலருக்கு காணப்படுகின்ற போதிலும், அது இன்று கனவாகியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.