மஹாராஷ்டிராவில் தொடரும் இழுபறி ஏட்டிக்குப் போட்டி

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கும் இடையே, ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ‘முதல்வர் பதவியை சுழற்சி முறையில் ஒதுக்குவது குறித்து, சிவசேனாவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை’ என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். இதற்கு பதிலடியாக, ஆட்சியில் சிவசேனாவுக்கு சம பங்கு தருவதாக, முதல்வர் பட்னவிஸ் பேசிய பழைய, ‘வீடியோ’வை, சமூக வலைதளத்தில், சிவசேனா கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 105 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா, 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இங்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களை, இந்த கூட்டணி பெற்றாலும், முதல்வர் பதவியை சுழற்சி முறையில், 2.5 ஆண்டுகளுக்கு இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்வது, அமைச்சரவையில், 50:50 சதவீத ஒதுக்கீடு போன்ற பிரச்னைகளால், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்சி அமைப்பதில் தாமதம் நிலவுகிறது.

முதல்வர் பதவியை, இரு கட்சிகளும் சுழற்சி முறையில், 2.5 ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்வதாக, தேர்தலுக்கு முன், பா.ஜ., வாக்குறுதி அளித்திருந்ததாகவும், தற்போது மறுப்பதாகவும், சிவசேனா கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இதை, பா.ஜ., தலைவர்கள் மறுத்துள்ளனர். இந்நிலையில், முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ், இந்த விவகாரத்தில், முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார்.

நேற்று அவர் கூறியதாவது:முதல்வர் பதவியை சிவேசனாவுடன் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வதாக, தேர்தலுக்கு முன், பா.ஜ., தரப்பில் எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவிடம் இது குறித்து பேசினேன். அவரும், இது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என உறுதியாக தெரிவித்து உள்ளார்.

அமைச்சரவையில், 50:50 சதவீத ஒதுக்கீடு குறித்த விஷயத்தில், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல், விரைவில் தெரிய வரும். சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுமா என்பது குறித்து, இப்போது எதுவும் கூற முடியாது. சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்கப்படும். மஹாராஷ்டிராவில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, பா.ஜ., நிலையான ஆட்சியை அளிக்கும். கூட்டணி கட்சி என்ற முறையில், சிவசேனாவுக்கு உரிய கவுரவம் அளிக்கப்படும். இந்த விஷயத்தில் மாற்றுத் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இது, கூட்டணி கட்சிகளுக்கு இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தும். மஹாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விஷயம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நான் தான் முதல்வர்; அதில், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு, விரைவில் சுமுக தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர் கூறினார். பட்னவிசின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, அவர் பேசிய பழைய பேச்சு அடங்கிய வீடியோவை, சிவசேனா கட்சியினர், சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். அதில், ‘மஹாராஷ்டிராவில், மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல்வர் மற்றும் அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வோம்’ என,பட்னவிஸ் பேசுவது போல் உள்ளது.

இது குறித்து, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவூத் கூறியதாவது:நாங்கள் அதிகாரத்துக்கு வந்து விடக்கூடாது என்பதில், சில சக்திகள் குறியாக உள்ளன. இந்த விஷயத்தில் முக்கிய முடிவு, விரைவில் எடுக்கப்படும். தேர்தலுக்கு முன், இரு தரப்புக்கும் இடையே என்ன விஷயங்கள் பேசப்பட்டு, உடன்பாடு ஏற்பட்டதோ, அந்த விஷயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான், எங்கள் ஒரே கோரிக்கை.

ஹரியானாவில் துஷ்யந்த் சவுதாலா இருப்பது போல், இங்கு யாரும் இல்லை. துஷ்யந்தின் தந்தை சிறையில் உள்ளார்.எங்கள் கட்சியைச் சேர்ந்த யாருடைய தந்தையும் சிறையில் இல்லை. எனவே, ஹரியானா அரசியல் போல், இங்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. சத்தியம், தர்மத்தின் அடிப்படையில் நாங்கள் அரசியல் நடத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், மாநிலத்தில் அடுத்த அரசு அமைப்பது குறித்து ஆலோசிக்க, பா.ஜ.,வுடன் நேற்று நடத்தவிருந்த கூட்டத்தை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ரத்து செய்து விட்டார். ‘உத்தவ் தாக்கரேவின் மகன், ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்கியே தீருவது என, அந்த கட்சியினர் உறுதியாக உள்ளனர்; இதில், பா.ஜ., தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை. ‘எனவே, மஹாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டு உள்ள இந்த இழுபறி, மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்’ என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரும், பா.ஜ., மூத்த தலைவருமான சஞ்சய் கட்கே கூறியதாவது:சிவசேனா சார்பில், 56 பேர், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில், 45 பேர், பா.ஜ.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்க விரும்புகின்றனர். ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பதை அவர்கள் விரும்பவில்லை. இந்த, 45 எம்.எல்.ஏ.,க்களும், எங்களுடன் தொடர்பில் உள்ளனர். புதிய அரசில், தங்களை இணைக்கும்படி, எங்களுடன் பேசி வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.