மழை வேண்டி 41 யாகங்கள்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அரசு முடிவு

இந்தப் பருவத்தில் மழை நன்றாகப் பொழிவதை வேண்டி 41 யாகங்களை 33 மாவட்டங்களில் மேற்கொள்ள குஜராத் முதல்வரான விஜய் ரூபானி அரசு முடிவெடுத்துள்ளது. மே 31ம் தேதி 33 மாவட்டங்களில் இந்த ‘பர்ஜன்ய யாகம்’ நடைபெறுகிறது.

குஜராத்தில் இந்த கோடையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது, மாநிலத்தின் நீராதாரங்கள் வேகமாக வற்றி வருகின்றன. இந்நிலையில் வரும் பருவமழை நீர் வீணாகமல் தடுக்க நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த யாகங்களில் முதல்வர் விஜய் ரூபானி, மாநில அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நடப்புக் கோடையில் இந்தியாவில் நீர் நெருக்கடியைச் சந்தித்து வரும் மாநிலங்களில் குஜராத்தும் உள்ளது. மொத்தமாக இந்த மாநிலத்தில் உள்ள 204 அணைகளிலும் நீர்மட்டம் கடுமையாகக் குறைந்து வருகிறது.

2019 தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் மழையில்லாமல் போனால் அது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் என்று விஜய் ருபானி அஞ்சுவதாகத் தெரிகிறது.

தென்மேற்கு பருவ மழை இந்தியாவின் மழைப் பருவத்தின் தொடக்க காலமாகும். இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழை சராசரியாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.