மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பது வேதனையளிக்கிறது: நிர்மலா சீதாராமன்

மற்றவர் இயக்கும் கருவியாக இருந்து ஆட்சியை நடத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பது வேதனையளிக்கிறது என நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னையில் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு, சட்டபூர்வ பணக்கொள்ளை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளாரே?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வர்ணித்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் பிரதமராக இருந்தபோது தான் பல்வேறு துறைகளிலும் பெரும் ஊழல்கள் நடந்தன. நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல் என பல ஊழல்கள் நடந்தன. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதை சந்தித்து வருகின்றனர். இதை தடுக்க முடியாமல், மற்றொருவர் இயக்கும் கருவியாக இருந்து அவர் ஆட்சியை நடத்தினார். தற்போது, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அவர் விமர்சிப்பது வேதனையாக உள்ளது.

பணமதிப்பு நீக்கம் மட்டுமின்றி ஜிஎஸ்டி வரி விதிப்பும் மக்களை கடுமையாக பாதித்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனவே?

ஜிஎஸ்டி என்ற சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் குறித்து நீண்டகாலமாக பேசி வருகிறோம். இதுதொடர்பாக பல அரசுகளும் நடவடிக்கை எடுத்து வந்தன. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றதும் ஜிஎஸ்டி வரியை ஏன் அமல்படுத்தவில்லை என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனால் ஜிஎஸ்டியை நாங்கள் அமல்படுத்திய பின், ஜிஎஸ்டிக்கு எதிராக எதிர்கட்சிகள் பேசுகின்றன.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.