மதுரை கப்பலூர் சம்பவத்துக்கு பிறகு ஒரே மேடையில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். ஆதரவாளர்கள் பங்கேற்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் திடீரென்று கைகோர்த்துள்ளதால் மதுரை மாவட்ட அதிமுகவில் இதுவரை நீடித்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துவிட்டதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்ட அதிமுகவில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இவர்களில் ஒருவர், மற்றொருவருக்கு முக்கியத்துவம் உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு விழாக்களிலும் ஒற்றுமையாக இருப்பதுபோன்று அனைவரும் பங்கேற்பார்கள்.ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அப்பதவியை இழப்பதற்கு ஒரு வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும் காரணமாக இருந்தனர்.

இவர்கள்தான் முதன்முதலாக, “சசிகலா முதல்வராக வேண்டும், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும்” என குரல் கொடுத்தனர். அதன்பிறகு அதிமுகவில் பல அணிகள் உருவாகின. முதலில் சசிகலா ஆதரவாளராக இருந்த உதயகுமாரும், செல்லூர் ராஜூவும், பின்னர் கே.பழனிசாமி தலைமையின் கீழ் செயல்பட்டனர். பின்னர், ஓ.பி.எஸ்.சுடன் பழனிசாமி இணைந்த பிறகு, இருவரும் ஓ.பி.எஸ்.சுடன் ராசியானார்கள்.

புறக்கணித்த ஓ.பி.எஸ்.

இந்நிலையில், கடந்த வாரம் மதுரை கப்பலூரில் நடந்த 100 அடி கட்சிக் கொடியேற்று விழா கல்வெட்டில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் ஆரம்பத்தில் பொறிக்கப்படாததால் அவரும், அவரது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்தனர். இந்த விவகாரம் அதிமுகவில் உள்கட்சி மோதலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால், இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கல்வெட்டில் துணை முதல்வர் பெயர் இடம்பெறச் செய்துள்ளோம். அவரை நேரில் சென்று விழாவுக்கு வருமாறு அழைத்தோம். யாரையும் புறக்கணிக்கவில்லை” என்றார்.

மீண்டும் சமரசம்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரை புறநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், அதன் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “நானும், முதல்வரும் இரட்டை குழல் துப்பாக்கிபோல் செயல்படுவோம், அதிமுகவில் மதுரை மாவட்டம் மிக முக்கியமானது” என்றார்.

மதுரை அதிமுகவில் முதல்வர் அணி, துணை முதல்வர் அணி என இரண்டு பிரிவாக அதிமுகவினர் இதுவரை செயல்பட்டனர். தற்போது முதல் முறையாக இரு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புறநகர் மாவட்ட அதிமுக கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதை அதிமுகவினர் வரவேற்றுள்ளனர்.