மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் – பாரதிய ஜனதா ( பா.ஜ.க )

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் கூறியதாவது: மதுரையை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கோரிக்கை. தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்தாலும், தமிழின் தலைநகராக மதுரையை அறிவித்து பெருமை சேர்க்க வேண்டும். மதுரை தமிழ் அன்னையின் பூமி. சங்கம் வளர்த்து தமிழ்கண்ட பூமி. மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் போதிய வளர்ச்சி இல்லை.

60 ஆண்டுகளாக தமிழின் பெயரை சொல்லி ஆட்சிபுரிந்துள்ளனர். மதுரைக்கு, தமிழுக்கு என்ன பெருமை கிடைத்துள்ளது.ஜெ., முதல்வராக இருந்தபோது மதுரையில் பிரமாண்டமான தமிழன்னை சிலை அமைக்க வேண்டும் என்றார். ஜெ.,யின் கனவை நிறைவேற்ற, தற்போதைய அரசு மதுரையில்தமிழன்னை சிலை ஏற்படுத்தவேண்டும்.

ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் தொழில்நகரங்களாக மாறக்கூடிய வகையில் மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவித்தே ஆக வேண்டும். அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் எல்லா கருத்துக்களிலும் ஒத்துப்போகிறோம் என கூற முடியாது. விநாயகர் சதுர்த்தி என்பது பா.ஜ.,வின் விழா அல்ல. தமிழக மக்களின் விழா. இது ஹிந்துக்களின் பண்டிகை அல்ல. தேசிய ஒருமைப்பாட்டின் பண்டிகை, என்றார்.