மக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி

மக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி துவங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் பார்லி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து வரலாற்றில் விவாதிக்கப்படும் போது, நாட்டு நலனுக்காகஎடுக்கப்பட்ட அந்த முடிவு குறித்தும், அப்போது, அதனை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள், அவர்களின் கருத்துகள் குறித்தும் நினைவில் கொள்ளப்படும்.

காங்கிரஸ் தலைவர் ஒருவர், காஷ்மீரில் ஹிந்துக்கள் அதிகம் இருந்தால், சிறப்பு சட்டம் நீக்கம் என்ற முடிவை பா.ஜ., எடுத்திருக்காது என கூறினார். நீங்கள், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் ஹிந்து முஸ்லிம் என பார்க்கிறீர்களா? காஷ்மீர் குறித்த மத்திய அரசின் முடிவால், நாடு அழிந்துவிடும் என காங்., தலைவர் ஒருவர் கூறினார். முடிவு எடுத்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாடு அழிந்துவிட்டதா?

 

மற்றொரு தலைவர், சிறப்பு சட்டம் நீக்கத்தால், காஷ்மீர் நம்மை விட்டு சென்றுவிடும் என தெரிவித்தார்? காஷ்மீர் நம்மை விட்டு சென்றுவிட்டதா? யாராவது காஷ்மீர் செல்ல வேண்டும் என விரும்பினால் என்னிடம் தெரிவியுங்கள். நான் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன். மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படும் பணிகள் துவங்கிவிட்டது. மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பாஜ., அனைத்து வெற்றி சாதனைகளையும் முறியடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.