மக்கள் இயக்கமாகும் வேல் யாத்திரை !! மக்கள் போகுமிடமெல்லாம் வரவேற்பு !!

தமிழக பா.ஜ., சார்பில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #துள்ளி_வருது_வேல், #VelYatra, #வெற்றிவேல்_யாத்திரை போன்ற ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தமிழக பாஜ., சார்பில் இன்று (நவ.,6) முதல் டிச.,6ம் தேதி வரையில் வேல் யாத்திரை நடைபெறுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார். இந்த யாத்திரை திருத்தணியில் தொடங்கி, திருச்செந்தூரில் முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாஜ., சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், திட்டமிட்டபடி வேல் யாத்திரையை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, திருத்தணியில் தொடங்க உள்ள யாத்திரையில் பங்கேற்க எல்.முருகன் கையில் வேலுடன் இன்று காலை புறப்பட்டு சென்றார். யாத்திரைக்கு முன்னர் முருகன் பேசுகையில், ‛கடவுளை வழிபடுவது எனது அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன். கடவுள் முருகனின் துணைக்கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையை தொடங்குகிறோம்,’ எனக்கூறினார். அவருடன் துணை தலைவர் அண்ணாமலை, வி.பி.துரைசாமி, கருநகராஜன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் புறப்பட்டனர்.

கோயம்பேடில் இருந்து புறப்பட்டு, மதுரவாயல், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி வழியாக வந்த வெற்றிவேல் யாத்திரை, திருவள்ளூர் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், யாத்திரைக்கு திடீரென அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து திருத்தணியில் பாஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். வேல் யாத்திரை பிரசார வாகனத்துடன் 6 வாகனம் மட்டுமே செல்ல வேண்டும் என போலீசார் அனுமதி அளித்ததால், திருத்தணி நோக்கி யாத்திரை வாகனம் சென்றது. இந்நிலையில், இந்த வேல் யாத்திரைக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளமான டுவிட்டரில், அனைத்து தடைகளையும் தகர்த்து வேல் யாத்திரை நடைபெறுவதை வரவேற்று #துள்ளி_வருது_வேல், #VelYatra, #வெற்றிவேல்_யாத்திரை, #வெற்றிவேல்வீரவேல் போன்ற ஹேஸ்டேக்குகள் பயன்படுத்தி பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், இந்த ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது.