மக்களை மறந்து சிலருக்காக மட்டுமே மோடி சிந்திக்கிறார்: ராகுல் காந்தி சரமாரி தாக்கு

சாமானிய, ஏழை மக்களுக்காக இல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்காக மட்டுமே பிரதமர் பணியாற்றுகிறார் என்று ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மோடியைச் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இன்று காலை வங்கிகளுக்கு நான் நேரில் சென்று நிலைமைகளை கவனித்தேன். நிறைய சிரமங்களை தாங்கள் அனுபவித்து வருவதாக அங்கு காத்திருந்த பலர் என்னிடம் வருத்தப்பட்டனர்.

அதாவது தாங்கள் வரிசையில் கால்கடுக்க பல மணி நேரம் காத்திருக்கையில், வங்கிகளின் பின்புறம் வழியாக தொகைகள் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பணம் பெறுவதில் சிக்கல் இல்லை, ஏழை மக்கள்தான் வரிசையில் நின்று பரிதவிக்கின்றனர்.

3 நாட்கள் வரிசையில் நின்று விட்டு பணமில்லாமல் வீடு திரும்புகின்றனர். இதனால் மக்களுக்கு ஏகப்பட்ட இழப்புகள் ஏற்பட்டுள்ளன” என்றார். இன்று காலை முதல் டெல்லியில் பல ஏடிஎம்-களுக்குச் சென்று ராகுல் காந்தி மக்களைச் சந்தித்தார். அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

இந்த ரூபாய் நோட்டு நடவடிக்கைக்குப் பிறகு நாடு ‘தங்கமாகி’ விடும் என்று பிரதமர் கூறியது பற்றி ராகுல் காந்தி கூறும்போது, “யாருக்கான தங்கமாக மாறும்? பிரதமருக்கு நெருக்கமான சிலரது கருவூலங்களில் பணம் நிறையும். அவர்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஆனால் வரிசையில் பணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு இழப்பே ஏற்படும்.

இதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள பிரதமர் மோடி ஏன் மக்களவைக்கு வர வேண்டும்? இன்று அவர் வேறு ஒரு தளத்தில் இருக்கிறார். அவர் அமைச்சர்களுடன் விவாதிப்பதுமில்லை, எதையும் கலந்தாலோசிப்பதுமில்லை, தன் போக்கிற்கு தான் நினைத்ததை செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார தீர்மானத்தை அவர் எடுக்கிறார், அதுவும் 3-4 பேரை மட்டுமே கலந்தாலோசித்து விட்டு திட்டமிடல் எதுவுமில்லை. விவசாயிகள் நிலைமை என்ன? ஏழை மக்கள், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தின் மீன்பிடித் தொழில் குடும்பங்கள் என்ன செய்யும்? பிரதமர் இவர்களைப் பற்றி யோசிப்பவர் அல்ல.

பிரதமர் மோடி இப்போதெல்லாம் ஒர் புதிய ஃபார்மில் உள்ளார். அவரை நீங்கள் சூப்பர் பிஎம் என்று கூட அழைக்க முடியாது. இவரை வர்ணிக்க புதிய வார்த்தையைத்தான் உருவாக்க வேண்டும்.

ரயில் விபத்து குறித்து…

ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் புல்லட் ரயில் குறித்து மோடிஜி பேசி வருகிறார். அவரது கவனம் தவறான இடத்தில் குவிந்துள்ளது, ரயில் பயணம் பாதுகாப்பாக அமைய என்ன செய்வது என்பதில் அவர் கவனம் இல்லை.

மோடியின் ஒட்டுமொத்த சிந்தனையும் 3000-5000 பேருக்கான மட்டுமானதாக இருக்கிறது, புல்லட் ரயில்கள் பற்றி பேசுபவர் ஏன் தண்டவாளத்தின் பராமரிப்பு பாதுகாப்பு பற்றி பேச மறுக்கிறார்?” என்றார் ராகுல் காந்தி.