மகிந்தாவின் ஆட்சிக் காலத்தைப் போன்றே மைத்திரியின் ஆட்சியிலும் குறிவைக்கப்படும் ஊடகவியலாளர்கள்

முன்னைய ஜனாதிபதியும் கொலைக்கரங்களுக்குச் சொந்தக்காரருமான மகிந்தா ராஜபக்;சா காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, சிங்கள மொழி பேசும் ஊடகவியலாளர்களில் யார் யார், மகிந்தாவின் ஆட்சியை விமர்சிக்கின்றார்களோ, அவர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இவ்வாறு மகிந்தாவின் ஏற்பாட்டில் கோத்தபாயவினால் திட்டமிட்டு கொல்லப்பட்ட லசந்த என்னும் சிங்கள மொழி பேசும் ஆங்கில பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விதம் மிகவும் கொரூரமானது.
இதைப்போன்று யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜன், மற்றும் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் ஆகியோரது படுகொலைகள் எமது இனத்திற்கு இன்னும் சோகத்தை சுமந்து நிற்கும் சம்பவங்களாகவெ தொடர்கின்றன. அதிலும் சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற இந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் பேசும் பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளதான செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேற்படி பத்திரிகையாளர் மீதான தாக்குதல் எம்மை மட்டும் பாதிக்கவில்லை. வடக்கில் உள்ள நேர்மையான தமிழ் அரசியல்வாதிகளையும் பாதித்துள்ளது. அதன் காரணமாக அவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்த வகையில் மேற்படி தமிழ் ஊடகவியலாளர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பொலிஸில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமையானது, இவ்வாறான விடயங்கள் அரச அனுசரணையுடன் நடைபெறுகின்றதா என்ற சந்தேகத்தை தோற்று வித்துள்ளதென வடக்கு முதலமை ச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிராக நேற்று முன்தினம் புதன்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப் பாட்டத்தின் பின்னர், வடக்கு முதல்வருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட முத லமைச்சர், அதன் பின்னர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களை பயமுறுத்தும் வகையிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர், இவை அரசியல் ரீதியாக நடைபெறுகின்றதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சிரேஸ்ட உப பொலிஸ் அதிபரிடம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் நன்கறிவார்கள் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், ஆகவே அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறு த்தியுள்ளார். அதே சந்தர்ப்பத்தில் இளைஞர்களும் இவ்வாறான பிழையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.