மகாராஷ்டிரா மாநிலத்திலும் சுமார் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வரை பா.ஜ.,வுக்கு தாவத் தயார்

மகாராஷ்டிரா மாநிலத்திலும் சுமார் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வரை பா.ஜ.,வுக்கு தாவத் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி கவலை அடைந்திருக்கிறது.

தற்போது அங்கு பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ..-சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்த நிலையில் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பா.ஜ., மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள்.

இதற்கிடையே கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்களை பா.ஜ.,வுக்கு இழுக்க ரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் உள்ள முக்கிய எம்.எல்.ஏ.க் களுக்கு பா.ஜ.. சார்பில் வலை விரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 50 பேர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக மராட்டிய மாநில பா.ஜ. மூத்த தலைவரும், அமைச்சருமான கிரிஸ் மகாஜன் கூறியுள்ளார். இது மராட்டிய மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகம், கோவா என்று தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.,வுக்கு தாவி வருவதால், கட்சியின் மூத்த தலைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.