‘மகளிர் மட்டும்’ வாய்ப்பு கிடைத்தது எப்படி? – இயக்குநர் பிரம்மா

‘மகளிர் மட்டும்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி என இயக்குநர் பிரம்மா தெரிவித்துள்ளார்.

‘குற்றம் கடிதல்’ படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் ‘மகளிர் மட்டும்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் பிரம்மா. சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைத்து வரும் படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார்.

இப்படத்தை இயக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதற்கு இயக்குநர் பிரம்மா, “’குற்றம் கடிதல்’ பார்த்துவிட்டு சூர்யா சார் போன் செய்தார். அப்போது அவரை சந்தித்து பேசிய போது, 3 கதைகள் சொன்னேன். அதில் ஜோதிகா மேடம் ’மகளிர் மட்டும்’ கதையைத் தேர்வு செய்தார்.

‘மகளிர் மட்டும்’ படத்தின் 80% பணிகள் முடிந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளோம். பெண்களைச் சார்ந்து இப்படத்தின் கதை நகரும். நமக்குள் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள், அவர்களுடைய வேலை இது என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளோம். அதை உடைப்பது போன்று ஜோதிகாவின் கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளேன்.

சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா ஏன் நடிக்க வைத்துள்ளேன் என்பதை படம் வெளிவந்தவுடன் தெரிந்து கொள்வீர்கள். பெண்கள் அவர்களுடைய சுதந்திரத்தை போராடி பெறத் தேவையில்லை. துணிச்சலுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தான் இப்படத்தில் கூறியுள்ளேன். இவ்விஷயத்தை மிகவும் கொண்டாட்டமாக கூறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் பிரம்மா.