பௌத்த துறவி விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியே, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்த அறி்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஹோமாகம நீதவானினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு தனது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்துவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன்

இந்த நிலையில், கலகொடஅத்தே ஞானசார தேரரினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டதையும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் பௌத்தர்கள் அல்லாத ஏனைய மதத்தவர்கள் மீது வன்முறைகளை தூண்டிவிடும் இந்த தேரரின் நடவடிக்கைகள் மீது ஒருபோதும் சட்ட நடவடிக்கைகள் எடுத்திராத சந்தர்ப்பத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாத்திரமே அவர் சட்டத்திற்கு உட்பட்டு கையாளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனவெறி மற்றும் மதவெறி ஆகியவற்றை கட்டுப்படுத்தி வைப்பதன் ஊடாக எல்லா பிரஜைகளும் சமமாக நடப்படும் ஒரு நாடு என்ற முன்னேற்றத்தை அடைவதற்கு சவால் ஏற்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, கடும்போக்காளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் இந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிப்பு

இந்நிலையில், பௌத்த பிக்கு மீது ஜனாதிபதி வெளிப்படுத்தும் மென்போக்க நடவடிக்கையானது, நாட்டிற்கு தவறான செய்தியை வெளிப்படுத்தி நிற்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களின் மீது வன்முறைகளை தூண்டி விடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியது என்ற வகையில் அந்த செய்தி அமைந்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த செயற்பாடானது பேரினவாதத்தை இன்னுமொரு கட்டத்திற்கு எடுத்து செல்லும் நடவடிக்கையாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கையெழுத்திட்ட நிலையிலேயே அவர் நேற்று வியாழக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டார்.

இதன்படி, கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பு – வெலிகடை சிறைச்சாலையிலிருந்து 9 மாதங்களின் பின்னர் நேற்று வெளியேறினார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட 6 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிப்பு

ஹோமாகம நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், நீதிமன்ற வளாகத்திற்குள் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் கலகொடஅத்தே ஞானசார தேரர் செயற்பட்டிருந்தார்.

இதையடுத்து, ஹோமாகம நீதிமன்றத்தின் அப்போதைய நீதான் ரங்க திஸாநாயக்கவினால் இந்த சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.

இந்த வழக்கு விசாரணைகளின் ஊடாக அவருக்கு 6 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வாறு வழக்கப்பட்ட தீர்ப்பிற்கு சவாலுக்கு உட்படுத்தி, கலகொடஅத்தே ஞானசார தேரர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதன்படி, 6 வருடங்கள் வழங்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை, 5 வருடங்களாக உயர்நீதிமன்றம் குறைத்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிப்பு

இந்த நிலையில்தான், கலகொடஅத்தே ஞானசார தேரர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவரின் விடுதலையை எதிர்பார்த்து பெருந்திரளானோர் வெலிகடை சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்டிருந்தார்கள்.

எனினும், நாட்டில் காணப்படுகின்ற பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு, கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறைச்சாலையின் வேறொரு நுழைவாயிலின் ஊடாக வெளியேறியதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல்வேறு வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதற்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் காரணமாக இருந்துள்ளார் என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

கலகொடஅத்தே ஞானசார தேரரின் வழிகாட்டலின் கீழ், இலங்கையிலுள்ள பல முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

அத்துடன், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு செயற்பாடுகளை கண்டித்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் பெரிய போராட்டங்களையும் நடத்தியிருந்தார்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிப்பு

இந்த நிலையில், சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் செயற்பாடுகளை கலகொடஅத்தே ஞானசார தேரர் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றின் பின்னர் அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழேயே கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த பின்னணியிலேயே அவர் பொதுமன்னிப்பின் கீழ் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலையின் பின் கலகொடஅத்தே ஞானசார தேரரின் நிலைப்பாடு

இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகள் காணப்படுவதாக தன்னால் வெளியிடப்பட்ட செய்தி தற்போது உண்மையாகியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

விடுதலையின் பின்னர் ஊடகங்களுக்கு நேற்றிரவு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் பெரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்த போதிலும், தன்னை எவரும் கருத்தில் கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் நிலைக்கொண்டுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க எதிர்வரும் காலங்களில் மிக பொறுமையுடன் கடமையாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

பல வருட போராட்டங்களின் பின்னர் தான் தற்போது சோர்வடைந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் தியானங்களை நடத்தி அமைதியான முறையில் வாழ்க்கையை கடக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டிற்காக உயிர்தியாகம் செய்ய முடியும் என கூறிய கலகொடஅத்தே ஞானசார தேரர், உயிர் தியாகம் செய்வதற்கு நாடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.