போயஸ் கார்டனில் தீபக், தீபா பேரவையினர் முற்றுகையா? போலீஸ் குவிப்பு

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை தீபக், தீபா பேரவையினர் முற்றுயிடப்போவதாக தகவல் வெளியானதால் போலீஸ் குவிக்கபட்டனர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடந்த 23-ந் தேதி பேட்டியளிக்கும் போது போயஸ் கார்டன் வீடு தனக்கும் தீபாவுக்கும் மட்டுமே சொந்தம். வேறு யாரும் அதை உரிமை கொண்டாட முடியாது, என்று அறிவித்தார்.

ஆனாலும் போயஸ் கார்டன் வீடு இது வரை நினைவு இல்லமாகவும் மாற்றப்பட வில்லை, அவரது அண்ணன் பிள்ளைகளுக்கும் வழங்கப்படவில்லை.இந்த நிலையில் போயஸ் கார்டன் வீட்டை தீபா ஆதரவாளர்கள் இன்று முற்றுகையிடப் போவ தாகவும், வீட்டுக்குள் நுழைய இருப்பதாகவும் தகவல் பரவியது.அதே போல் தீபக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து போயஸ் கார்டனில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா இருந்த போது நுழைவு வாயில் மூடப்பட்டு போலீசார் காவலுக்கு நின்று கொண்டிருப்பார்கள்.அதே போல் இன்றும் தேனாம்பேட்டை உதவி கமிஷனர் சுப்பிரமணி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கதீட்ரல் சாலையில் இருந்து ஜெயலலிதா வீடு வரை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா பேரவையினர் வரப்போவதாக தகவல் இல்லை. தீபக் மட்டுமே வரப்போவதாக தகவல் பரவியது.இந்த தகவலை வக்கீல் ஒருவர் சமூக வலைதளங்களில் பரப்பினார். எனவே அசம்பாவிதம் நடை பெறாமல் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.