போதை மருந்து கடத்தல் குறையுமா? இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சி திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ராவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பிராந்திய பாதுகாப்பிற்காக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பின் மூலம் இணக்கப்பாடுடன் செயற்படுவது குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு இந்தியா வழங்கும் பயிற்சிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு இந்தியாவினால் வழங்கப்படும் பயிற்சி நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது, இந்திய பாதுகாப்பு செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக இந்திய பாதுகாப்பு செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இரண்டு நாடுகளின் பாதுகாப்பு செயலாளர்களும் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சத்து ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.