போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனைதான் என்ற தீர்மானத்திலிருந்து நான் பின்வாங்கமாட்டேன் முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான கட் டமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கட்டணமற்ற துரித தொலைபேசி இலக்கமொன்றும் இதன் போது ஜனாதிபதி அறிமுகப்படுத் தப்பட்டது. அதற்கமைய 1984 என்ற இலக்கத்தினூடாக இந்த தகவல்களை வழங்க முடியும்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இலங்கையில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக தனது வேண்டுகோளுக்கமைய பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, அதற்காக வழங்கக்கூடிய தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்பில் கண்டறிவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் நிபுணர் குழுவொன்று வெகுவிரைவில் வருகை தரவுள்ளதாக தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை காரணமாக சீரழிவுகளுக்கு முகங்கொடுத்திருந்த பிலிப்பைன்ஸ்நாடு, அந்நாட்டு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் காரணமாக இன்று அந்த சவாலினை வெற்றிகொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் கீழான பிரதான செயற்திட்டமாக ஜனவரி 21 முதல் 25 வரை போதைப் பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாண பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் ஓர் இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திங்கள் காலைக் கூட்டத்தின்போது போதைப்பொருள் பற்றிய உறுதி மொழியை வழங்கியதன் பின்னரே போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

ஒட்டுமொத்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டத்தில் மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய போதைப்பொருள் ஒழிப்பு பாட சாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 21ஆம் திகதி போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்பூட்டும் செயலமர்வுகள் வகுப்பறைகளில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், 22ஆம் திகதி பெற்றோர்களை பாடசாலைக்கு வரவழைத்து போதைப்பொருள் தடுப்பு பற்றி விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள், 23ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பிலான சட்டநடவடிக்கைகள் பற்றிய தெளிவுபடுத்தும் செயலமர்வுகளும் இடம்பெறவுள்ளன.

ஜனவரி 24ஆம் திகதி போதைப் பொருள் தொடர்பில் அரசியல் பிரதி நிதிகளை தெளிவூட்டும் செயலமர்வுகளும், ஜனவரி 25ஆம் திகதி ஊடகங்களின் வாயிலாக பாடசாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பிலான தகவல்களை வழங்கும் நிகழ்வுகளும், ஜனவரி 26ஆம் திகதி தனியார் தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத் திட்டங்கள் உள்ளடக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. அத்துடன் ஜனவரி 27ஆம் திகதி வணக்கஸ்தலங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்புணர் வூட்டும் வேலைத்திட்டங்கள் நடை பெறவுள்ளன.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சமூகத்திற்கு செய்திகளை கொண்டு செல்லும் சிறந்த தூதுவர்கள் பாடசாலை மாணவர்களே எனத் தெரிவித்தார். இதனால் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்தின்போது பாடசாலை மாணவர்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி தெளிவூட்டினார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 பாடசாலைகளின் புனர்நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப செலவுகளுக்கான நிதியை வழங்குதல், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத 13 பாடசாலைகளுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல வேலைத் திட்டங்கள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக்கர் தனியார் காணிகளும் அரசாங்கத்தின் கீழ் இருந்த நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ்ரீ; சேனாநாயக்க வால் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி குறித்த ஆவணங்களை மாவட்ட செயலாளர்களிடம் கையளித்தார்.

அமைச்சர்களாகிய தயா கமகே, ரிசார்ட் பதியுதீன், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அங்கஜன் இராமநாதன், காதர்மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இது இவ்வாறிருக்;க,போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் கடந்த இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கைதிகள் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, தண்டனையை நிறைவேற்ற தான் கடந்த காலங்களில் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக கூறியுள்ள ஜனாதிபதி, அந்த முயற்சிகள் சற்று காலதாமதமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மரண தண்டனை நிறைவேற்றும் ஆவணங்கள் மாயம் – மைத்திரிபால சிறிசேன
நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சட்டவிரோத போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளினதும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள், அனைத்தும் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.எனினும், போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜையொருவரின் ஆவணம் மாத்திரமே காணப்படுவதாகவும், தான் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சட்டவிரோத போதைப்பொருள் குற்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற ஆவணம் மாத்திரமே காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகர்களினால் இந்த ஆவணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.